வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்கான 16 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு வவுனியாவில் கண்ணீர் மல்க இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் 3011 ஆவது நாளாகப் போராட்டம் மேற்கொண்டு வரும் வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள கொட்டகையில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது உயிரிழந்த உறவுகளுக்காக கண்ணீர் மல்கி கதறியழுத உறவுகள் அகவணக்கம் செலுத்தி, ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செய்யப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,

“இந்த நாள் மிகவும் வேதனையானது. போரின் கொடூரமான முடிவை நினைவூட்டுகின்றது. அங்கு ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்தப் போர் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் விளைவாக மட்டுமல்ல, தமிழர் துன்பங்களுக்கு உலகளாவிய அலட்சியத்தின் விளைவாகவும் இருந்தது. முழு உலகமும் நம்மைப் புறக்கணித்தது, முள்ளிவாய்க்காலை தமிழர் நம்பிக்கைகளின் கல்லறையாக மாற்ற அனுமதித்தது.

இன்று, முள்ளிவாய்க்கால் நாளில், உலகுக்கு நினைவூட்டுகின்றோம். எங்கள் வலி தொடர்கின்றது. எங்கள் போராட்டம் தொடர்கின்றது. நீதி மற்றும் சுதந்திரத்துக்கான எங்கள் கோரிக்கை ஒருபோதும் அமைதியாகாது.” – என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.