உப்பைக் கூடச் சரியாக வழங்க முடியாத அரசின் அச்சுறுத்தலுக்கு அடிபணியோம்! குட்டி சபைகளில் எதிரணி ஆட்சி மலரும்!! – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சூளுரை.

நாட்டு மக்களுக்குத் தேவையான உப்பைக் கூட இந்த அரசால் வழங்க முடியாது போயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

“நாட்டில் தற்போது வினைத்திறன் அற்ற அரச நிர்வாகமே காணப்படுகின்றது. தற்போதைய ஆட்சியாளர்கள் பேசுவதில் மிகவும் திறமையானவர்களாக இருந்தாலும், மக்களின் பிரச்சினைகளுக்கு அவர்களிடம் பதில்களோ தீர்வுகளோ இல்லை.” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் பிரச்சினைகளைக் கேட்டறியும் “கிராமத்துக்கு கிராமம் நகரத்துக்கு நகரம்” வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு, ‘மல்லிகாராம வீடமைப்புத் தொகுதி’ மக்களுடன் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இவ்வாறு தெரிவித்தார்.

“ஆளும் தரப்பினர் உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிக்கு உரிமை இல்லை என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர். தற்போதுள்ள தேர்தல் முறைமையின் கீழ் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் அதிகாரத்தை அமைக்கும் உரிமை எதிர்க்கட்சிக்கும் காணப்படுகின்றது. எனவே, உப்பைக் கூட சரியாக வழங்க முடியாத அரசின் இந்த அச்சுறுத்தல்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் அஞ்சாது.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

“எதிர்க்கட்சிக்குப் பெரும்பான்மை காணப்படும் உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிலைநாட்டவும், ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தவும் ஜனநாயகக் கட்டமைப்புக்குள் எடுக்க முடியுமான அதிகபட்ச நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி எடுக்கும்.” – என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.