ரி – 56 ரக துப்பாக்கியுடன் பெண்ணொருவர் கைது!

கொழும்பு, வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்படுத்தப்படட ஹேவ்லாக் டவுன் பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் ரி – 56 ரக துப்பாக்கியுடன் சென்ற பெண் ஒருவர் கைதாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த ஆடம்பர தொடர்மாடிக் குடியிருப்பிலுள்ள தனது வீட்டுக்குப் பெண் ஒருவர் ரி – 56 ரக தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியைக் கொண்டு சென்றார்.
இவர் துப்பாக்கியை வாகனத்தில் இருந்து எடுப்பதை அவதானித்த அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளவத்தை பொலிஸார் குறித்த வீட்டை பரிசோதனை செய்து பெண்ணை கைது செய்தனர். இதன்போது, பை ஒன்றில் இருந்த ரி – 56 ரக துப்பாக்கியையும் கைப்பற்றினர்.
துப்பாக்கியை வைத்திருந்த பெண் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய பிற நபர்கள் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.