முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதனை படைத்து வரும் விவசாய, தொழிற்றுறை முயற்சியாளர்கள் கெளரவிப்பு.

நிலைபேறான உயர்தர வாழ்க்கைத் தரம் கொண்ட வளமான மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தை உருவாக்கும் இலட்சியப் பயணத்தில் மாவட்ட மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளான விவசாயம் மற்றும் தொழிற்றுறையில் சவால்களைக் கடந்து சாதனை படைத்து வரும் முயற்சியாளர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் நோக்கில் 2024 ஆண்டுக்குரிய மாவட்ட விவசாய மேன்மை விருதுகள் மற்றும் மாவட்ட தொழில்துறை மேன்மை விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் என்பன வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தனது உரையில் தெரிவித்ததாவது:-
“எமது மாகாணத்திலுள்ள உற்பத்தியாளர்கள் இடைத்தரகர்களின்றி தங்களது பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கும் அதனை ஏற்றுமதி செய்வதற்கும் உரிய வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கவேண்டும். அதற்காக நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இங்கு விருதுகளைப் பெற்றவர்கள் சிலர் தங்கள் கருத்துக்களில் தமக்கான சந்தை வாய்ப்புக்களிலுள்ள சிக்கல்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தனர். அதை நிவர்த்திக்கவே நாங்கள் செயற்பட்டு வருகின்றோம்.
இவ்வாறான விருது வழங்கும் செயற்பாட்டை நடைமுறைப்படுத்தி முல்லைத்தீவு மாவட்டச் செயலரைப் பாராட்டுகின்றேன். எங்கேயும் தலைமைத்துவம் சிறப்பாக அமைந்தால் அந்த நிறுவனம் உயர்வுறும். நான் பல இடங்களில் இதைக் குறிப்பிட்டிருக்கின்றேன். முல்லைத்தீவு மாவட்டச் செயலரின் தலைமைத்துவத்தால் இந்த முன்மாதிரியான செயற்பாடு நடைபெற்றிருக்கின்றது. அதேபோல புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்;ந்த மக்கள் என்னை அதிகளவில் முன்னர் சந்தித்தனர். இப்போது அவர்கள் வருவதில்லை. அவர்களின் பிரச்சினைகள் அவர்களின் பிரதேச செயலகங்களில் பிரதேச செயலர்களால் தீர்த்து வைக்கப்படுகின்றன. புதுக்குடியிருப்பு மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர்களை நான் பாராட்டுகின்றேன்.
மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் நாம் இருக்கின்றோம். எங்களுக்காக மக்கள் இல்லை. எங்களது மக்களுக்கு நாங்கள் சேவைகளைச் செய்யாவிட்டால் வேறு யார் வந்து சேவை செய்யப்போகின்றார்கள். அதிகாரிகள் கதிரைகள் நிரந்தரம் என்று நினைத்துக்கொண்டிருக்காமல் மக்களை அன்பாக அனுசரித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொடுங்கள்.
நாம் பிறந்தது சந்தோசமாக வாழ்வதற்கு. பணம் உழைப்பதால் சந்தோசம் கிடைக்காது. மற்றையவர்களுக்கு உதவி செய்வதால்தான் சந்தோசம் கிடைக்கும். எனவே, இயலுமானவரை மற்றையவர்களுக்கு உதவி செய்யவேண்டும். எங்கள் அரசாங்க அதிகாரிகள் இதைப் புரிந்துகொண்டு பணியாற்றவேண்டும்.” – என்றார்.
இன்றைய தினம் 11 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டதுடன், 82 பேருக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் தொழித்துறைத் திணைக்கள உதவிப் பணிப்பாளர், வடக்குக்கான கைத்தொழில்துறைகள் மன்றத்தின் தலைவர், முல்லைத்தீவு மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.