சத்தீஸ்கரில் 26 நக்சல்கள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படையினர் அதிரடி

சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று(புதன்கிழமை) காலை நடைபெற்ற தாக்குதலில் 26 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் – பிஜப்பூர் எல்லையில் அபுஜ்மத் பகுதியில் இன்று காலை சத்தீஸ்கர் காவல்துறை, மாவட்ட ரிசர்வ் படை அடங்கிய பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அப்போது நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் 26-க்கும் மேற்பட்ட நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய நக்சல் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நவீன ஆயுதங்கள், வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலில் காவலர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். சத்தீஸ்கர் துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான விஜய் ஷர்மா இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மே 7 ஆம் தேதி பிஜப்பூர் மாவட்டத்தில் 15 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.