சென்னை அணியின் 10வது தோல்வி: தொடரும் சரிவு!

பிரிமியர் தொடரில் நேற்று, டில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதின. இரு அணிகளும் ‘பிளே ஆப்’ வாய்ப்பை இழந்து விட்ட நிலையில், ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், பீல்டிங் தேர்வு செய்தார். இதில் வென்றால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பெறுவதை தவிர்க்கலாம் என்ற நிலையில் களமிறங்கியது சென்னை.

சென்னை அணிக்கு கான்வே, ஆயுஷ் மாத்ரே ஜோடி துவக்கம் கொடுத்தது. தேஷ்பாண்டே வீசிய முதல் ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார் கான்வே. போட்டியின் 2வது ஓவரை யுத்விர் சிங் வீசினார். இதன் 2வது பந்தில் பவுண்டரி அடித்த கான்வே (10), 4வது பந்தில் அவுட்டாகி, அதிர்ச்சி கொடுத்தார். கோல்கட்டாவுக்கு எதிரான அறிமுக போட்டியில் 31 ரன் விளாசிய உர்வில் படேல், இம்முறை 2வது பந்தில் ‘டக்’ அவுட்டாகி திரும்பினார்.

மனம் தளராத ஆயுஷ், தேஷ்பாண்டே ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். யுத்விர் வீசிய 4வது ஓவரில், அஷ்வின் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் அடித்தார். இதே ஓவரில் ஆயுஷ், தன் பங்கிற்கு சிக்சர், பவுண்டரி என விளாச, மொத்தம் 24 ரன் எடுக்கப்பட்டன. தேஷ்பாண்டே வீசிய போட்டியின் 6வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்த ஆயுஷ் (20 பந்து, 43 ரன்) அடுத்த பந்தில் அவுட்டானார். சென்னை அணி 6 ஓவரில் 68/3 ரன் எடுத்தது.

‘சீனியர்’ அஷ்வின், 13 ரன் எடுத்து, ஹசரங்கா சுழலில் சிக்கினார். அடுத்த சில நிமிடத்தில் ஜடேஜாவும் (1) அவுட்டாக, மீண்டும் ஒருமுறை சென்னை அணி முதல் 10 ஓவருக்குள் 5 விக்கெட்டுகளை (78/5, 7 ஓவர்) இழந்து திணறியது. பிரவிஸ், ஷிவம் துபே இணைந்தனர். ரியான் பராக் ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் என பிரவிஸ் அடிக்க, சென்னை அணி 10 ஓவரில் 102/5 ரன் குவித்தது.

ஆறாவது விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்த நிலையில், மத்வல் பந்தில் போல்டானார் பிரவிஸ் (42 ரன், 25 பந்து). அடுத்து துபேயுடன் இணைந்தார் கேப்டன் தோனி. ரியான் பராக் பந்தில் தோனி, ஹசரங்கா பந்தில் துபே என இருவரும் தலா ஒரு சிக்சர் அடித்தனர். சென்னை அணி 17 ஓவரில் 170/6 ரன் எடுத்தது. கடைசிகட்ட ஓவர்களில் வேகமாக ரன் சேர்ப்பதற்குப் பதில், திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்த, ரசிகர்கள் விரக்தி அடைந்தனர். 18 வது ஓவரில் 4, 19 வது ஓவரில் 6 ரன் எடுக்கப்பட்டன.

மத்வல் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் துபே (39 ரன், 32 பந்து), 5வது பந்தில் தோனி (16 ரன், 17 பந்து) அவுட்டாகினர். கடைசி 19 பந்தில் 17 ரன் மட்டும் எடுத்த சென்னை அணி, 20 ஓவரில் 187/8 ரன் மட்டும் எடுத்தது. கம்போஜ் (5), நுார் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், வைபவ் கலக்கல் துவக்கம் கொடுத்தது. கலீல் அகமது வீசிய 3வது ஓவரில் மிரட்டிய ஜெய்ஸ்வால், 4, 4, 6, 4 என தொடர்ந்து விளாசினார். இவர் 36 ரன்னில் (19 பந்து) அவுட்டானார். அடுத்து வைபவுடன் இணைந்த சாம்சன், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஜடேஜா ஓவரில் 2 சிக்சர் அடித்த வைபவ், நுார் பந்தில் ஒரு சிக்சர் அடித்து, 27 பந்தில் அரைசதம் கடந்தார். அஷ்வின் சுழலில் சாம்சன் (41), வைபவ் (57) அவுட்டாகினர். கடைசியில் பதிரானா பந்தில் ஜுரல் ஒரு சிக்சர் அடிக்க, ராஜஸ்தான் அணி 17.1 ஓவரில் 188/4 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. ஜுரல் (31), ஹெட்மயர் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.