படுகொலை செய்யப்பட்ட ஊடகர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ். நகரில் விநியோகம்!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ். ஊடக அமைய ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாணம் நகரில் விநியோகிக்கப்பட்டது.
யாழ் . ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் சக ஊடகவியலாளர்களால் இன்று சனிக்கிழமை காலை, யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம், அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விசாரணை அறிக்கை விநியோகிக்கப்பட்டது
கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை, ஊடகவியலாளர் நிமலராஜன் வீட்டினுள் புகுந்த துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், வீட்டினுள் கைக்குண்டு வீசியும் தாக்குதல் மேற்கொண்டனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தை தாய் மற்றும் மருமகன் ஆகியோர் காயங்களுக்குள்ளாகி இருந்தனர்.
நிமலராஜன் படுகொலைக்குக் கடந்த 25 ஆண்டுகளாக நீதி இன்றி நிலைத்து வரும் நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காகத் தொடர்ந்தும் யாழ். ஊடக அமையம் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



