யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் பொலிஸ் அவசர சேவையை உடன் பெற 021 222 2221 இற்கு அழைப்பு எடுக்கலாம்!

யாழ்ப்பாணம் நகரை மையமாகக் கொண்டு பொலிஸாரின் விசேட சேவை ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

போக்குவரத்துப் பிரச்சினைகள் மற்றும் சிறு குற்றங்கள் என்பவற்றைத் தவிர்க்கும் வகையில் இந்தச் சேவை யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமஹா தலைமையில் சம்பிரதாயபூர்வமாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ள 021 222 2221 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பெடுத்துப் பொதுமக்கள் முறையிடுவதன் மூலம் பொலிஸார் அந்தப் பகுதிக்கு விரைந்து வந்து பிரச்சினைகளைத் தீர்ப்பர் என்று பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள எந்தப் பகுதியில் இருந்தும் குறித்த இலக்கத்துக்கு அழைப்பெடுத்து முறையிட்டால் அந்தந்தப் பகுதி பொலிஸ் நிலையங்கள் ஊடாக பொது இடங்கள் மற்றும் போக்குவரத்துக்களின் போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக உடனடித் தீர்வைப் பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.