நாட்டில் எலிக்காய்ச்சல் தீவிரம்! கடந்த ஆண்டில் 200 பேர் மரணம்!! – 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு.

இலங்கையில் வருடாந்தம் சுமார் 13 ஆயிரம் பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவதுடன், கடந்த ஆண்டில் மட்டும் இந்நோயினால் 200 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தொற்றுநோய்ப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் துஷானி தம்பேரரா எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த ஆண்டில் மட்டும் 11 ஆயிரத்து 585 பேர் எலிக்காய்ச்சல் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,800 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். குறிப்பாக இரத்தினபுரி, காலி, கேகாலை, மொனராகலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

லெப்டோஸ்பைரா எனும் பக்டீரியாவினால் இந்நோய் ஏற்படுகின்றது. தொற்றுக்குள்ளான எலிகள் மற்றும் ஏனைய பாலூட்டி விலங்குகளின் சிறுநீர் மூலமே இந்தப் பக்டீரியா பரவுகின்றது. பக்டீரியா பரவியுள்ள நீர்நிலைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் வயல் நிலங்களில் நடமாடுவது அல்லது வேலை செய்வதன் மூலம் மனிதர்களுக்கு இந்நோய் தொற்றுகின்றது.

தற்போது கொழும்பு, கண்டி உள்ளிட்ட நகர்ப்புறங்களில் முறையற்ற விதத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால், எலிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நகர்ப்புறங்களிலும் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளது. பொதுவாக 20 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்பட்டாலும், அண்மைக்காலமாகச் சிறுவர்களும் இத்தொற்றுக்கு உள்ளாவது அவதானிக்கப்பட்டுள்ளது.

சிறுபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலும், பெரும்போக அறுவடைப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலும் விவசாயிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். வயல் நிலங்கள் மற்றும் கால்வாய்களில் இறங்குவோர் உரிய சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.