‘கடல் கடந்த இந்தியக் குடியுரிமை’ மலையகத் தமிழருக்கு வேண்டும்! – இந்திய உப ஜனாதிபதியிடம் நாளை மனோ அணியினர் நேரில் வலியுறுத்தும்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய உப ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணனுக்கும், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.

இச்சந்திப்பின் போது முன்வைக்கப்படவுள்ள முக்கிய கோரிக்கைகள் குறித்து கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. விளக்கியுள்ளார்.

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களில் எவரேனும் விரும்பும் பட்சத்தில், அவர்களுக்கு ‘கடல் கடந்த இந்தியக் குடியுரிமை’ அந்தஸ்து வழங்குவதை இலகுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய உப ஜனாதிபதியிடம் முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளையின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி, மலையகக் கல்வி வளர்ச்சிக்கு முழுமையான உதவிகளைப் பெற்றுக்கொள்வது குறித்து இதன்போது வலியுறுத்தப்படவுள்ளது.

குறிப்பாக,

*புதிய பல்கலைக்கழக வளாகம் மற்றும் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளை நிறுவுதல்.
* இந்தியாவின் ‘நவோதயா’ பாடசாலை திட்டத்தின் அடிப்படையில் ஆங்கில மொழி மூல சர்வதேச இந்து பாடசாலையை அமைத்தல்.
* தாதியர் மற்றும் தொழில்-நுட்ப பயிற்சி கலாசாலைகளை உருவாக்குதல்.
* பாடசாலைகளுக்கான பௌதிக வளங்கள் மற்றும் புலமைப்பரிசில் திட்டங்களை அதிகரித்தல்.

மலையக மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை விரிவுபடுத்துவதுடன், இந்தியா வழங்கும் உதவித் தொகைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படவுள்ளது.

“இந்த முன்மொழிவுகளை ஏற்கனவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கர் ஆகியோரிடமும் முன்வைத்துள்ளோம். மீண்டும் அதனை இந்திய உப ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம்” என்று மனோ கணேசன் எம்.பி. குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் கூட்டணியின் தலைவருடன் பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம் மற்றும் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கை – இந்திய வம்சாவளி மக்களின் பன்முக வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ச்சியான ஆதரவை வழங்க வேண்டும் என்பதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாகும்.

Leave A Reply

Your email address will not be published.