நாமலின் கைது பழிவாங்கும் செயலாக இருக்கவும் கூடும்! – வெலிக்கடைச் சிறையில் அவரைச் சந்தித்த பின் ஊடகவியலாளர்களிடம் மஹிந்த இப்படிக் கருத்து.

“நாமல் ராஜபக்ஷவின் கைது பழிவாங்கும் செயலாக இருக்கவும் கூடும் அல்லது இல்லாமலும் போகலாம்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் நலனை விசாரிப்பதற்காக அவரின் தந்தையாரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சனிக்கிழமை வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார்.

நாமலைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“நாமல் ராஜபக்ஷவின் கைது பழிவாங்கும் செயலாக இருக்கவும் கூடும் அல்லது இல்லாமலும் போகலாம். எனினும், அவர் தற்போது சிறையில் உள்ளார். எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தின் ஊடாகப் பிணை பெறுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.

அரசியல் தலைவராக இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு நாமல் முன்னரும் முகங்கொடுத்துள்ளார் என்பதால் இது எமக்குப் புதியதொரு விடயம் அல்ல.

இந்தக் கைதினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது. இது கட்சி முன்னோக்கி நகர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்.

சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் நாமல் தனது அரசியல் பணிகளை வழமைபோல் தொடர்வார்.” – என்றார்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்காக எயார்பஸ் ரக விமானங்களைக் கொள்முதல் செய்த விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே நாமல் ராஜபக்ஷ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.