250 பேருக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் வைத்து அன்ரிஜென் பரிசோதனை.

வவுனியா கந்தசாமி கோவில் வீதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அன்ரிஜென் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

வவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுக்காத ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்கள் என 250 பேருக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் வைத்து அன்ரிஜென் பரிசோதனை முதற்கட்டமாக இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகர்ப் பகுதியில் எழுமாறாக நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 55 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகரின் ஒரு பகுதி கடந்த சில நாட்களாக முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதிகளைச் சேர்ந்த அனைத்து வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்நிலையில், அடுத்த வாரமளவில் நகரத்தில் முடக்கப்பட்ட பகுதிகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். இதனால் மீதமுள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அன்ரிஜென் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது. குறித்த நடவடிக்கைகளுக்கு வவுனியா வர்த்தக சங்கமும் தமது ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.