திருக்கேதீஸ்வர குளத்தில் அத்துமீறி மீன்பிடிக்கும் இராணுவத்தினர் களத்தில் சாள்ஸ் எம்.பி.

மன்னார் – திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள குளத்தில் இராணுவத்தினர் அத்து மீறி மீன் பிடியில் ஈடபட்டு வருவதாக குளத்தை குத்தகைக்கு எடுத்த நபர் தெரிவித்துள்ளார்.

குறித்த குளம் கமக்கார அமைப்பிற்கு உரியது எனவும் அதனை திருக்கேதீஸ்வரம் பகுதியில் வசிக்கும் தனிநபர் ஒருவருக்கு 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மீன் பிடிக்க குத்தகைக்கு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் இராணுவத்தினர் எவ்வித அனுமதியும் இன்றி இரவு பகல் பாராது குறித்த குளத்தில் தொடர்ச்சியாக மீன் பிடித்து வந்துள்ளனர்.

இதனால் குறித்த குளத்தை குத்தகைக்கு பெற்ற நபர் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் உரிய அமைப்பினர் இராணுவ அதிகாரிகளின் கவனத்திற்கு இது தொடர்பில் கொண்டு சென்ற போதும் உரிய தீர்வு கிடைக்கவில்லை.

இதனால், திருக்கேதீஸ்வர கமக்கார அமைப்பு மற்றும் பாதிக்கப்பட்ட நபர் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு வந்தனர்.

குறித்த விடயம் தொடர்பில், நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறித்த பகுதிக்குச் திடீர் விஜயம் மேற்கொண்டு நேரடியாக குறித்த சம்பவத்தை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது இராணுவத்தினர் சிவில் உடையில் மீன் பிடித்துக் கொண்டு இருப்பதை நேரடியாக அவதானித்தார்.

இவ்விடயம் தொடர்பாக இராணுவ உயர் அதிகாரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரியப்படுத்திய போது, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இராணுவ அதிகாரி நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார்.

உரிய தீர்வு கிடைக்காது விட்டால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராணுவ அதிகாரியிடம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.