இராணுவத்திலிருந்து விலகிய 500 பேரை இணைக்க நடவடிக்கை.

“சிறைச்சாலைகள் திணைக்களத்தில் 2 ஆயிரத்து 305 பதவி வெற்றிடங்கள் நிலவுகின்றன. அதற்கான நியமனங்களை வழங்க சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதேவேளை, சிறைச்சாலையில் அவசர செயலணியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலணிக்கு இராணுவத்திலிருந்து விலகியுள்ள 500 பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.”

இவ்வாறு நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்;.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்குப் பதிலகளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறிய நீதி அமைச்சர் அலி சப்ரி, மேலும் தெரிவித்ததாவது:-

“சிறைச்சாலைகள் பாதுகாப்பு அலுவலகர்களாக 7 ஆயிரத்து 762 அதிகாரிகள் உள்ளனர். ஆனால், 5 ஆயிரத்து 567 பேரே தற்போது சேவையில் உள்ளனர். 2 ஆயிரத்து 305 பதவி வெற்றிடங்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தில் நிலவுகின்றன. சிறைச்சாலைகள் திணைக்களத்தில் காணப்படும் பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள கைதிகளை அதிவிசேட பாதுகாப்பு பூஸா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். பூஸா, அங்குனுகொல மற்றும் கொழும்பு சிறைச்சாலைகளுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

பூஸா, அங்குனுகொல மற்றும் கொழும்பு சிறைச்சாலைகளில் தொலைபேசி பாவனையும் தடைசெய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் உரிய வகையில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவு மறுசீரமைக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைகளில் செயற்படும் அவசர செயலணியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலணிக்கு இராணுவத்திலிருந்து விலகியுள்ள 500 பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.