மைதானத்தில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பெண்களுக்கு ‘கசையடி’ கொடுத்த தலீபான்கள்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனையடுத்து, ஆப்கானிஸ்தானில் பெண்களின் சுதந்திரம் முற்றிலும் தடைபட்டது. பெண்கள் சுதந்திரம், கல்வி, ஆடை சுதந்திரம் உள்பட பல்வேறு துறையிலும் பெண்கள் மீது தலீபான்கள் அடக்குமுறையை கட்டவிழ்ந்து விட்டுள்ளது.

அதேபோல், இஸ்லாமிய மத சட்டங்களை ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அமல்படுத்தி வருகின்றனர். இந்த சட்டங்கள் மூலம் கடுமையான கட்டுப்பாடுகள், தண்டனைகளும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் லோகர் மாகாணத்தின் பல் ஆலம் நகரில் மைதானத்தில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் பெண்கள் உள்பட 12 பேருக்கு தலீபான்கள் கசையடி தண்டனை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டு, பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 3 பெண்கள் 9 ஆண்கள் என மொத்தம் 12 பேர் பல் ஆலம் நகரில் உள்ள மைதானத்திற்கு இன்று காலை அழைத்து வரப்பட்டனர். அந்த மைதானத்தில் நூற்றுக்கணக்கான ஆண்கள் குவிந்திருந்தனர். தண்டனை வழங்கப்படுவதை பார்வையிட வருமாறு டுவிட்டர் உள்பட சமூகவலைதளம் அழைப்பு விடுப்பட்டது. இதனை தொடர்ந்து காலை மைதானத்தில் நூற்றுக்கணக்கான ஆண்கள் குவிந்தனர்.

அங்கு குற்றஞ்சாட்டப்பட்ட 3 பெண்கள் உள்பட 12 பேரும் மைதானத்தில் மையப்பகுதியில் நிறுத்தப்பட்டனர். அங்கு குற்றத்தின் அடிப்படையில் 12 பேருக்கும் தலீபான்கள் 21 முதல் 39 கசையடிகள் தண்டனையாக வழங்கினர். தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை அமல்படுத்தி கடுமையான தண்டனைகள் விதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.