ரணில் அரசின் வலையில் சிக்குமா தமிழ்க் கட்சிகள்? – ஸ்ரீகாந்தா சந்தேகம்.

“ஜனாதிபதியும் அவரின் தலைமையின் கீழ் உள்ள பொதுஜன பெரமுன அரசும் விரித்திருக்கும் அரசியல் தந்திர வலைக்குள் தமிழ்க் கட்சிகள் விழுந்து விடுமா என்ற விசனமே இப்போது தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது. அரசியல் தீர்வின் அடிப்படையாக, இணைப்பாட்சிக் கோரிக்கையை முன்வைத்து வலியுறுத்தத் தவறினால் அது ஓர் வரலாற்றுத் துரோகமாகவே அமையும்.”

– இவ்வாறு ஊடக அறிக்கை மூலம் தெரிவித்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந. ஸ்ரீகாந்தா.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை கொழும்பில் சம்பந்தன் வீட்டில் கூடி ஆராயவிருக்கையில் இந்த அறிவிப்பை விடுத்திருக்கின்றார் அவர்.

தமது அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு:-

“இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த கையோடு, தமிழ் மக்களை இரண்டாத் தர பிரஜைகள் ஆக்கி, இன முரண்பாடுகளை தீவிரமடையச் செய்து, ஒரு நீண்ட கால உள்நாட்டு யுத்தத்துக்கு வழிகோலி, பொருளாதாரத்தை சீர்குலைத்து, இன்றைய நெருக்கடி நிலைமை உருவாவதற்கான, அடிப்படைக் காரணமே இந்த நாட்டில் கடந்த 75 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒற்றை ஆட்சி முறையே ஆகும்.

பெரும்பான்மை மக்களான சிங்களவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை ஒட்டுமொத்தமாக கையளித்திருக்கும் ஒற்றை ஆட்சி முறை அகற்றப்பட்டு, பல்லின, பலமத மக்கள் வாழும் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ள சமஷ்டி எனப்படும் இணைப்பாட்சி முறை கொண்டு வரப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் கோரிக்கையாகும்.

இப்போது பாரிய பொருளாதார நெருக்கடியினால் சரிந்து கொண்டிருக்கும் இலங்கைத் தீவினை மீட்டெடுக்கவும், தூக்கி நிறுத்தவும், பொருளாதார வலிமை கொண்ட நாடுகளிடம் உதவி கோரி நிற்கும் இலங்கை அரசு இந்த நாடுகளை அனுசரித்துச் செல்ல வேண்டிய கட்டாய நிலைமைக்குள் நின்று கொண்டிருக்கின்றது. அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டு, பொருளாதார சீரமைப்பை முன்னெடுக்க வேண்டிய இறுக்கமான சூழ்நிலைக்குள்ளும் சிக்கியுள்ளது.

இந்நிலையில், நாட்டில் ஸ்திர நிலைமையை ஏற்படுத்திட, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை தமிழ் மக்களின் சம்மதத்துடன் கொண்டு வர வேண்டிய அரசியல் சவாலை ஜனாதிபதியும் அவரின் அரசும் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தக் காரணத்தினால்தான் தமிழ்க் கட்சிகளை அரசியல் பேச்சுகளுக்கு வருமாறு ஜனாதிபதி அவசரமாக அழைப்பு விடுத்து வருகின்றார்.

அதேநேரத்தில் நாடாளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் கடந்த சில தினங்களில் ஜனாதிபதி தெரிவித்திருக்கும் கருத்துக்கள் எல்லாமே, ஒற்றையாட்சி முறைக்குள் அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்தி, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அதற்குள் முடக்குவதற்கு அவர் முனைந்து நிற்கின்றார் என்பதையே திட்டவட்டமாக எடுத்துக் காட்டுகின்றன.

ஜனாதிபதியின் அழைப்புக்குப் பச்சைக் கொடி காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு – செலவுத்திட்டத்தை எதிர்க்காமல் ஒதுங்கி நின்றதன் மூலம், அவரின் முயற்சிகளை அனுசரித்துச் செல்லும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளது. இதே வழியில்தான் விக்னேஸ்வரன் அவர்களின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் இணைந்திருக்கின்றது.

இத்தனைக்கும், இன்றைய பொருளாதார நெருக்கடிக்குள்ளும், பாரிய எண்ணிக்கையில் உள்ள படைத்தரப்பினரின் பராமரிப்பிற்கு மிகப் பெரும் தொகையான பணம் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை நிராகரித்து, வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்க இந்தக் கட்சிகள் தவறியுள்ளன.

இவை எல்லாம், ஜனாதிபதியும் அவரின் தலைமையின் கீழ் உள்ள பொதுஜன பெரமுன அரசும் விரித்திருக்கும் அரசியல் தந்திர வலைக்குள் இந்தக் கட்சிகள் விழுந்து விடுமா என்ற விசனத்தையே தோற்றுவித்திருக்கின்றது.

ஒற்றையாட்சிக்குள் நீதியானதும் நிலையானதுமான அரசியல் தீர்வு என்பது ஒருபோதும் சாத்தியம் இல்லை என்றே இந்தக் கட்சிகள் எல்லாம் கூறிவந்துள்ள பின்னணியில், அரசியல் தீர்வின் அடிப்படையாக, இணைப்பாடசிக் கோரிக்கையை முன்வைத்து வலியுறுத்தத் தவறினால் அது ஓர் வரலாற்றுத் துரோகமாகவே அமையும்.

ஆட்சி அதிகாரத்தில் உள்ள சிங்கள, பௌத்த பேரினவாத தலைமைகளோடு கொஞ்சவோ அல்லது கெஞ்சவோ செய்யாமல், தமிழ்த் தேசியம் சார்ந்த அரசியல் கட்சிகள் அனைத்தும், கொள்கை அடிப்படையில் ஓர் வழி நின்று நேர் வழி செல்ல வேண்டிய மிக முக்கியமான காலமிது. இவ்விடயத்தில் நேர்மையான நிலைப்பாடே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.