பொதுத் தேர்தல், குட்டித் தேர்தல்: இரண்டையும் ஒன்றாக நடத்துங்கள்! – எதிரணி வலியுறுத்து.

அடுத்த வருடம் மார்ச் மாதம் நாடாளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவதன் மூலம் கோடிக்கான ரூபா பணத்தை மீதப்படுத்த முடியும் என்றும், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இப்படிச் செல்வதே சரியான முறை என்றும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அவரிடம் கருத்துக் கேட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“பெப்ரவரி மாதமளவில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் வந்துவிடும். அதேநேரம் மார்ச்
மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தற்போதைய பொருளாதார நிலைமையின் கீழ் இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்தினால் செலவை மீதப்படுத்த முடியும்.

ஜனாதிபதி ஜனநாயகத் தலைவர் என்றால் – மக்கள் கூறுவதைக் கேட்பவர் என்றால் இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்த வேண்டும்.

மக்கள் இந்த ஆட்சியாளர்களைப் போகுமாறு கூறிவிட்டார்கள். இவர்கள் போவதாக இல்லை. பலவந்தமாக ஆட்சியில் இருக்கின்றார்கள்.

ஜனநாயகம் பேசுகின்ற – மனித உரிமைகள் பற்றிப் பேசுகின்ற ஒரு தலைவர் என்றால் இதற்கு இணங்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.