12 புதிய அமைச்சர்கள்: ரணிலுக்கு பஸில் தரப்பு மீண்டும் அழுத்தம்!

‘மொட்டு’க் கட்சியிலிருந்து 12 பேரை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்ற அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை. ‘மொட்டு’வின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் வருகையைத் தொடர்ந்து – அவர் அருகில் இருக்கும் தைரியத்தில் மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர் பஸில் தரப்பினர்.

வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்ககெடுப்பு நாளை (08) மாலை இடம்பெறுகின்றது. அது முடிந்த கையோடு அமைச்சரவை நியமனம் இடம்பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பஸில் தரப்புக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார். ஆனால், அது தொடர்பான ரணிலின் செயற்பாடு அவ்வளவு வேகமாக இல்லை என்று பஸில் தரப்பு குற்றம் சுமத்துகின்றது.

“ஜனாதிபதி அவர் வழங்கிய வாக்குறுதியை மீறி எமது காலைவாருவதற்கு முயற்சி செய்கின்றார்” என்று பஸில் தரப்பு எம்.பிக்கள் புலம்புகின்றனர்.

பஸில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன் இந்த விடயம் பற்றி அவர் ஜனாதிபதி ரணிலுடன் பேசினார். “வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அமைச்சரவை நியமனம் இடம்பெறும்” என்று ரணில் கூறினார். அதேவேளை, “நீங்கள் தந்த அந்த 12 பேருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்க முடியாது” என்று ரணில் மீண்டும் பஸிலுக்கு நினைவுபடுத்தினார்.

அதாவது அந்தப் பட்டியலில் இருக்கின்ற நாமல் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜோன்சன் பெர்னாண்டோ ஆகிய நால்வருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படமாட்டாது என்று பஸில் அமெரிக்காவில் இருக்கும் போதே ஜனாதிபதி பல தடவைகள் பஸிலிடம் கூறி இருந்தார். அதற்கான காரணத்தையும் விளக்கி இருந்தார். அதையே மீண்டும் நினைவுபடுத்தினார்.

“இல்லை, முன்னாள் அமைச்சர்களான அவர்கள் நால்வருக்கும் மீண்டும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டும்” என்று ஆரம்பத்தில் பிடிவாதமாக நின்ற பஸில் இப்போது அமைதியாகிவிட்டார். எப்படியோ அமைச்சர்களை நியமித்தால் போதும் என்ற நிலைப்பாட்டில்தான் அவரும் இருக்கின்றார் என்றே தெரிகின்றது.

இருந்தும், அந்த நால்வர் போக ஏனையவர்களைக்கூட நியமிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை என்று பஸில் தரப்பு தெரிவிக்கின்றது. இதனால் அவர்கள் இந்த நியமனத்தை விரைவுபடுத்தக் கோரி ரணிலுக்குக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் அவர்கள் ஆளுநர்கள் – அமைச்சர்கள் நியமனத்தை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதியைக் கோரியுள்ளனர்.

புதிய ஆளுநர்கள் நியமனமும் அமைச்சர்கள் நியமனம் போல் இழுபறியிலேயே உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மூவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் நிலைப்பாடு காரணமாகவே ஆளுநர்களின் நியமனமும் இழுபறியில் உள்ளது என்று அறியமுடிகின்றது.

இருப்பினும், இந்த இரண்டு விவகாரம் தொடர்பிலும் வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு முடிந்ததும் ஜனாதிபதி ரணில் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று ஜனாதிபதி வட்டாரம் தெரிவிக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.