டெல்லி கொடூர விபத்து : வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

டெல்லி கஞ்சன்வாலா பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை கார் விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் அடையாம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் பல கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாக உயிரிழந்து கிடந்தார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று அந்தப் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, பெலினோ கார் ஒன்று இரு சக்கர வாகனமான ஸ்கூட்டி மீது மோதியது தெரியவந்தது.

பெலினோ வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த வாகனத்தை ஓட்டி வந்தது தீபக் கண்ணா என்பதும், அவர் அந்தக் காரை மற்றொருவரிடம் இருந்து இரவல் வாங்கிக் கொண்டு தனது நண்பர்கள் நான்கு பேரை அழைத்துக் கொண்டு ஹரியானா மாநிலத்தில் இருக்கும் மூர்த்தால் நோக்கிச் செல்லும் போது விபத்து ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும் காரில் இருந்த ஐந்து பேரும் குடிபோதையில் இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஐந்து பேரையும் தேடிப்பிடித்து கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவி காட்சியில் விபத்திற்குள்ளான ஸ்கூட்டியில் உயிரிழந்த பெண்ணுடன் மற்றொரு பெண்ணும் இருந்தது தெரியவந்து, இதையடுத்து மற்றொரு பெண் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, ஸ்கூட்டியில் உயிரிழந்த பெண்ணும் மற்றொரு பெண்ணும் தனது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றதாகவும், சுல்தான்புரி பகுதியில் சென்ற போது பின்னால் வந்த கார் தங்கள் ஸ்கூட்டியின் மீது மோதி விபத்திற்குள்ளானதாகவும், தனக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் மற்றொரு பெண் குறிப்பிட்டுள்ளார். பயத்தில் தான் அந்த இடத்தைவிட்டு உடனடியாக சென்றுவிட்டதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார். விபத்து ஏற்பட்ட போது பெண்ணின் கால் காருக்குள் சிக்கி பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் அந்தப் பெண் கொடூரமாக உயிரழந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் லேசான காயமடைந்த பெண்ணிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று முறையான விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

இந்த சம்பவம் தலைநகர் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரத்தில் பெண் ஒருவர் கொடூரமாக இறந்து கிடக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து, பலரும் இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அந்தப் பெண் நிர்பயாவை போல கொடூரமாக வண்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். எனவே இது குறித்து உயர் மட்ட விசாரணை நடத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து விபத்து நிகழ்ந்த பகுதியில் இருக்கும் பல்வேறு சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் இந்த சம்பவம் குறித்த முழு விபரங்களும் வெளிவரும் என டெல்லி மாநகர காவல்துறை சட்டம் ஒழுங்கு சிறப்பு ஆணையர் சாகர் பிரீத் ஹூடா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.