முன்னாள் போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட்டின் உடல் இன்று அடக்கம்.

உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 31-ந்தேதி மரணம் அடைந்தார்.

போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து பதவி விலகிய அவர் வாடிகனில் ஓய்வில் இருந்து வந்தார்.

அவருக்கு பின் போப்பாண்டவர் பிரான்சிஸ் அந்த பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த மாதம் 28-ந்தேதி போப்பாண்டவர் 16-ம் பெனடிக்டின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக இப்போதைய போப்பாண்டவர் பிரான்சிஸ் தெரிவித்தார். இந்தநிலையில் போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட் சிகிச்சை பலன் இன்றி கடந்த 31-ந்தேதி மரணம் அடைந்தார்.

அவருக்கு வயது 95. அவரது உடல் வாடிகன் அரண்மனையில் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சென்று அஞ்சலி செலுத்தினர்.

5 நாட்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போப்பாண்டவர் 16-ம் பெனடிக்டின் இறுதி சடங்குகள் வாடிகன் தேவாலயத்தில் இன்று நடக்கிறது. அடக்க திருப்பலிக்கு பின்னர் அவரது உடல், சைப்ரஸ் மர பெட்டிக்குள் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.

அந்த பெட்டிக்குள் போப்பாண்டவரின் சின்னம், அவரது உருவம் பொறித்த பதக்கங்கள் உள்ளிட்டவையும் வைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து பாதிரியார்கள், ஆயர்கள், கர்தினால்கள் கலந்து கொள்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.