பொருளாதார நெருக்கடிக்கு முடிவு கட்டுவோம்! – பொங்கல் வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்.

“இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றிகொள்வதற்கான நாளாக தைத்திருநாள் அமையப் பிரார்த்திப்போம்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

உழவர்கள் தங்கள் உழவுக்கு உதவிய சூரியனுக்கும் ஏனைய உயிர்களுக்கும் நன்றியறிதலாக தை முதலாம் திகதியை தைப்பொங்கல் விழாவாகக் கொண்டாடுகின்றார்கள்.

தைப்பொங்கல் விழாவானது, மனிதனுக்கும் மற்றும் இயற்கைக்கும் உள்ள உன்னத உறவை புலப்படுத்துவதாக அமைகின்றது.

அனைத்து இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தின் வெளிப்பாடாகவும், பரஸ்பர புரிந்துணர்வுடன் கூடிய நட்பின் அடையாளமாகவும் தைப்பொங்கல் விழா கொண்டாடப்படுகின்றது.

2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த தைப்பொங்கல் பண்டிகை, தமிழர்களின் பாரம்பரிய, கலாசார அடையாளத்தைப் பேணுவதுடன், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பிரிக்க முடியாத தொடர்பை அடையாளப்படுத்துவதாகவும் அமைகின்றது.

மக்களிடையே ஒற்றுமை மற்றும் சமூகத்தின் நட்புணர்வைப் புதுப்பிப்பதுடன், எதிர்கால வெற்றிக்கான ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் பெறுவதற்கு ஏதுவாக தைத்திருநாள் அமைகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருங்கடியான இக்காலகட்டத்தில் விவசாயத்துறையின் பங்களிப்பு அளப்பரியது. ஆகவே, இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றிகொள்வதற்கான நாளாக தைத்திருநாள் அமையப் பிரார்த்திப்போம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு அமைவாக இலங்கையர்களாக இனம் – மதம் கடந்து சகோதரத்துவத்துடன் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி,நாட்டை ஒன்றாய் முன்னோக்கி கொண்டு செல்ல உறுதி பூணுவோம்.

இனம், மதம், சாதி போன்ற குறுகிய வேறுபாடுகளை மறந்து இயற்கையோடு இணைந்து வாழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அனைத்து இந்து பக்தர்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.