ஈஸ்டர் தாக்குதலும் ராஜபக்ச சதியும்: சரத் பொன்சேகா பரபரப்புப் பேட்டி

ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ராஜபக்ச குடும்பத்தினர் விடுதலைப் புலிகளுக்கு கடற்படைக்கு எதிராக அதிநவீன படகுகளை வாங்க பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா, ஈஸ்டர் தாக்குதல் ராஜபக்ச குடும்பத்தினரால் திட்டமிடப்பட்ட சதி என்றும், சுனாமி பேரழிவின் போது கிடைத்த நிவாரண நிதியை திருடியவர்கள் மற்றும் தேசிய இராணுவத்தை அழிக்க எதிரிப் படைகளுக்கு மில்லியன் கணக்கான டாலர்களை வழங்கியவர்கள் தேர்தலில் வெற்றிபெற 250 உயிர்களைப் பறிக்கத் தயங்க மாட்டார்கள் என்றும் கூறினார்.
‘மீமெஸ்ஸோ டிவி’ யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், கடற்படைக்கு எதிராக அதிநவீன படகுகளை வாங்க ராஜபக்ச குடும்பத்தினர் விடுதலைப் புலிகளுக்கு உதவியது குறித்து பசில் ராஜபக்ச தனக்கு கூறிய கதையை சரத் பொன்சேகா அதில் வெளிப்படுத்தினார்.
“இந்த கதையை எனக்கு பசில் கூறினார். பசில் என் வகுப்பில் இருந்த நண்பர். நான் இராணுவத் தளபதியாக இருந்தபோது பசில் என்னுடன் நெருக்கமாக இருந்தார். ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் அலுவலகத்தில் பசில் ராஜபக்சவுக்கு ஒரு சிறிய அலுவலகம் இருந்தது. போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. 2008ல் சீனாவில் பீஜிங் ஒலிம்பிக் நடந்தது. அந்த நேரத்தில், சீனா எமக்கான வெடிமருந்துகளை அனுப்பவில்லை. ஏனெனில், போருக்கு ஆயுதங்களை வழங்கினால் மேற்கத்திய நாடுகள் ஒலிம்பிக்கில் பங்கேற்காது என்று அவர்கள் நினைத்தார்கள். எனவே ஆயுத கப்பல்கள் வருவது நின்றது.
நான் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவிடம் சென்று இந்த பிரச்சினையை சொன்னேன். இப்போது சீனா வெடிமருந்துகளை அனுப்பவில்லை. பாகிஸ்தானில் இருந்து வெடிமருந்துகளை வாங்க முடியும். இதற்கு சுமார் 100 மில்லியன் டொலர்கள் தேவைப்படும். தர முடியுமா என்று கேட்டேன். அதற்கு கோட்டாபய, “சரத், சீனா நமக்கு கடனாக வெடிமருந்துகளை வழங்குகிறது. நான் எப்படி 100 மில்லியன் டொலர்களை உங்களுக்கு வழங்க முடியும்?” என்று கேட்டார்.
போரை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில், பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு மூலையில் பசில் அறை இருந்தது. நான் அங்கு சென்று நடந்ததை கூறினேன். உடனே அவர் பி.பி. ஜெயசுந்தராவை அழைத்து இராணுவத் தளபதிக்கு 100 மில்லியன் டொலர்களை கொடுங்கள் என்று கூறினார். நான் பாகிஸ்தான் இராணுவத் தளபதியை அழைத்தேன். அவர் 65 மில்லியன் டொலர் மதிப்புள்ள வெடிமருந்துகளை வழங்கினார். அந்த பணத்திற்கு வெடிமருந்துகளை வாங்கினோம்.
இந்த கோரிக்கையை வைக்க நான் பசில் ராஜபக்சவை சந்தித்தபோது, நாங்கள் நட்பாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போது பசில் எனக்கு ஒரு கதையை சொன்னார். நான் அதை முன்னர் கேள்விப்பட்டதே இல்லை. அவர்தான் நட்பாக பேசிக்கொண்டிருக்கும்போது கதையை ஆரம்பித்தார்.
2004 தேர்தலில் வடக்கில் வாக்களிப்பதை நிறுத்த பிரபாகரனுக்கு உதவ முடியுமா என்று கேட்டாராம். அதற்கு பிரபாகரன் மலேசியாவிலிருந்து படகுகளை வாங்க இரண்டு மில்லியன் டாலர்கள் வேண்டும் என்று கூறியுள்ளார்.
தேர்தலுக்காக செலவு செய்ய ஒரு சக்திவாய்ந்த அண்டை நாட்டிலிருந்து இரண்டு மில்லியன் டொலர்கள் கிடைத்ததாம். அந்த பணத்தை அப்படியே பிரபாகரனுக்கு கொடுத்ததாக பசில் என்னிடம் கூறினார்.
பசில் பிரபாகரனை சந்தித்த இடத்தில் ஒரு மலையக தமிழ் அரசியல்வாதியும் இருந்தாராம். அவர் பெயரையும் சொன்னார். ஆனால், அவர் இன்னும் பாராளுமன்றத்தில் இருப்பதால் அந்த பெயரை நான் சொல்ல விரும்பவில்லை.
“போர் முடியும் வரை அந்த படகுகளில்தானே LTTE கடற்படையை விரட்டி விரட்டி அடித்தது?” என்று சரத் பொன்சேகா கேட்டார். தேர்தலில் வெற்றி பெற தேசிய இராணுவத்தை அழிக்க எதிரிகளுக்கு தெரிந்தே உதவியவர்கள், 48,000 மக்களின் உயிர்களை காவு கொண்ட சுனாமி பேரழிவின் போது கிடைத்த தேசிய நிவாரண நிதியை திருடியவர்கள் , தேர்தலில் வெற்றி பெற 250 பேரை கொல்வது அவர்களுக்கு பெரிய விஷயமே அல்ல என ஃபீல்ட் மார்ஷல் தெரிவித்தார்.