மனைவி இரட்டை பெண் குழந்தை பிரசவித்ததால் விரக்தியில் கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு..!

மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகாட் பகுதியில் ஜனவரி 18ஆம் தேதி மாலை அங்குள்ள வைகங்கா ஆற்றுப் பாலத்தில் இருந்து ஒரு நபர் மொபைல் போனில் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தோர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து பல மணிநேரம் தேடி உடலை மீட்டது. உயிரிழந்த அந்த நபரை அடையாளம் கண்டு தற்கொலைக்கான காரணத்தை விசாரித்த போது தான் அதிர்ச்சி செய்தி வெளிவந்தது. உயிரிழந்தவர் 35 வயதான வாசுதேவ் பாட்லே. இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆண் குழந்தையை எதிர்பார்த்த நிலையில், மனைவி மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த 18ஆம் தேதி அன்று பிரசவம் நடந்துள்ளது.

பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், மீண்டும் இரட்டை பெண் குழந்தை பிறந்ததால் வசுதேவ் மனம் கலங்கி விரக்தி அடைந்துள்ளார். நீண்ட நேரம் சோகமாக இருந்த அவர் மருந்து வாங்கப் போகிறேன் என்று சொல்லி மருத்துவமனையை விட்டு வெளியேறி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

வசுதேவ்வுக்கு சொந்தமாக 14 ஏக்கர் நிலம் உள்ள நிலையில் அதில் விவசாயம் செய்து வந்துள்ளார். அத்துடன் தினசரி கூலி வேலையும் இவர் பார்த்துள்ளார். பெண் குழந்தைகள் பிறந்தது மட்டும் தான் இந்த தற்கொலைக்கு காரணமா அல்லது வேறு ஏதேனும் குடும்ப தகராறு உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.