ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள கமல்ஹாசன்..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் தோழமைக் கட்சிகளை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி இருந்தார். அதுபோலவே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கேட்டிருந்தார். நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவை அறிவிப்பதாக கமல்ஹாசன் கூறியிருந்தார்.

இதுகுறித்து இன்று காலை 11.30 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். முன்னதாக ராகுல்காந்தியின் தேசிய ஒற்றுமை பயணத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன், ராகுல்காந்தியுடன் உரையாடலும் நிகழ்த்தி இருந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால், கமல்ஹாசனின் இன்றைய ஆலோசனைக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார். காங்கிரஸ் வெற்றிக்கு தானும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களும் வேண்டிய உதவிகளை செய்வோம் என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலத்தையும் நியமித்தார்.

Leave A Reply

Your email address will not be published.