ஆளுநரின் தேநீர் விருந்து.. ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுகவின் கூட்டணி கட்சிகள்..!

ஜனவரி 4ஆம் தேதி சென்னையில் நடந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் எனக் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்றும்போது சில வார்த்தைகளை சேர்த்தும், சில வார்த்தைகளை தவிர்த்தும் படித்தார். இதற்கு எதிராக உடனடியாக முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிய பாதியிலேயே அவையிலிருந்து ஆளுநர் கிளம்பினார். தமிழ்நாடு சர்ச்சை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்க அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக திமுக, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரை விமர்சித்து வருகின்றன.

இதனிடையே குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தேநீர் விருந்தை புறக்கணித்துவிட்ட விசிக, ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளது.

விசிகவைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தன. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், “ஆளுநர் ஆளுநராக இல்லை, ஆர்எஸ்எஸ்காரராக செயல்படுகிறார். எனவே தேநீர் விருந்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கவில்லை, புறக்கணிக்கிறோம்” என நியூஸ் 18 க்கு பேட்டியளித்துள்ளார்.

இதேபோல மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “ஆளுநர் தொடர்ந்து தமிழ்நாட்டிர்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவர் பதவி விலக வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில் அவர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. எனவே புறக்கணிக்கிறோம்” என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அதன் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். மேலும் மதிமுகவும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.