சட்டப்பேரவையில் வெளிநடப்பு நிகழ்வுக்குப் பிறகு..மீண்டும் நேருக்கு நேர் சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – ஆளுநர் ரவி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9 ஆம் தேதி ஆளுநர் உரையின்போது, ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைவு உரையில் குறிப்பிடப்பட்டிருந்த சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டு அவர் வாசித்தார். குறிப்பாக, திராவிட மாடல் ஆட்சி, சமூக நீதி, பெண்ணுரிமை, தமிழ்நாடு அமைதிப்பூங்கா உள்ளிட்ட பல வார்த்தைகளை அவரது ஆங்கில உரையில் தவிர்த்தார். அவரது ஒப்புதலுடன் தயாரான அறிக்கையில் இருந்த வார்த்தைகளை அவரே தவிர்த்ததை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ரவி அவையில் இருந்தபோதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்து வாசித்தார். அவர், அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக வாசிக்கவில்லை என குற்றம்சாட்டினார். அதனால் ஆளுநர் படித்தவை அவைக்குறிப்பில் ஏறாது என முதலமைச்சர் தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருந்தபோதே ஆளுநர் ரவி விருட்டென அவையை விட்டு வேகமாக வெளியேறினார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஏற்கெனவே ஒப்புதல் தந்த முழு உரை அவைக்குறிப்பில் பதிவேற்றப்பட்டது. தமிழ்நாடு வரலாற்றிலேயே முதல்முறையாக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியதைத் தொடர்ந்து அவைக்கு வெளியிலும் விமர்சனக் கணைகள் பறந்தன.

தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என ஆளுநர் பேசியதற்கே ஏற்கெனவே திமுக-வினர் கடுமையாக விமர்சித்த நிலையில் சட்டப்பேரவை விவகாரம் விரிசலை மேலும் அதிகரித்தது. இந்த பின்னணியில் சம்பவம் நிகழ்ந்து 17 நாட்களுக்குப் பிறகு குடியரசு தின விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினும், ஆளுநர் ஆர்.என். ரவியும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டியுள்ளது. குடியரசு தினத்தில் கொடியேற்ற கடற்கரை சாலைக்கு வரும் ஆளுநரை முதலமைச்சர் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்பார்.

அவர் முன்கூட்டியே வந்து ஆளுநரை எதிர்கொண்டு வரவேற்க வேண்டும். மேலும், உயரதிகாரிகளையும் ஆளுநருக்கு அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும்.

அதன்பிறகு கொடியேற்றும் ஆளுநர், மேடைக்குச் சென்று அணிவகுப்பு மரியாதையை ஏற்பார்.

பின்னர், மேடையில் இருந்தபடி ஆளுநரும், முதலமைச்சரும் குடியரசு தின அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளை பார்வையிடுவர். சட்டப்பேரவையில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களுக்குப் பிறகு இருவரும் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளனர்.

இன்று மாலை நடக்கும் தேநீர் விருந்துக்கு வரும்படி முதலமைச்சரை ஆளுநர் ரவி தொலைபேசி வாயிலாக நேற்று அழைத்திருந்தாலும், இன்று நேருக்கு நேர் சந்திக்கும்போது நிகழப்போவது என்ன என்பதை அறிய தமிழ்நாடே ஆவலாக இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.