13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஒருபோதும் அனுமதியோம்! – அண்ணாமலையை எச்சரிக்கிறார் வீரசேகர.

“வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட வேண்டும், அது தமிழர் தாயகம் என்பதை மறைமுகமாக எடுத்தியம்பும் வகையிலேயே தமிழக பாரதிய ஜனதாத் கட்சித் தலைவர் கே.அண்ணாமலை கருத்து வெளியிட்டுள்ளார். இதற்கு எதிராக இலங்கை அரசு போர்க்கொடி தூக்கக்கூடாது என்பதற்காகவே வடக்கும், கிழக்கும் முழுவதுமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கைகளிலேயே உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். அண்ணாமலையின் இந்த விசமத்தனமான கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இலங்கையைப் பொறுத்தவரை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மோடியில் கைகளில்தான் உள்ளன என்று இலங்கைக்கு வந்து சென்ற பின்னர் சென்னையில் வைத்து பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை கருத்து வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கே சரத் வீரசேகர மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அண்ணாமலை கூறுவது போல் 13 ஆவது திருத்தச் சட்டம் தீர்வாக அமையாது. ஏனெனில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.

நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் உளறுவதை இந்தியத் தரப்பினர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இது 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேரம் அல்ல. 13ஆவது திருத்தத்தை நாடாளுமன்றம் ஊடாக முழுமையாக இல்லாதொழிப்பதற்கான நேரமே கனிந்துள்ளது.

இலங்கையில் 13 க்கு எதிராக பிக்குகள் கூட வீதியில் இறங்கியுள்ளமை அண்ணாமலைக்குத் தெரியவில்லையா? இது பௌத்த நாடு என்பதை அவர் மறந்துவிட்டாரா?” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.