தேர்தல் தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு!

“உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் நிறைவு பெறும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்கெடுப்புக்கான புதிய திகதி அறிவிப்புக்கு 21 நாள் காலவகாசம் வழங்கப்பட வேண்டும். தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு தீர்மானத்தை எடுக்கும். தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் நாம் தலையிடப் போவதில்லை. உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவுக்கு அமைய அரச அதிகாரிகள் செயற்படுவார்கள்.”

இவ்வாறு பிரதமரும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07) நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த பிரதமர் மேலும் கூறுகையில்,

“தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் கூடவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்ட விடயம் அடிப்படையற்றது. ஜனாதிபதி தலைமையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலையும் தேசிய பாதுகாப்புச் சபை கூடுகின்றது. திறைசேரியின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் செல்வதைத் தடுப்பதற்காகவே அவர் தேசிய பாதுகாப்புச் சபைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுவதும் அடிப்பமையற்றது. தேசிய பாதுகாப்புச் சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதனை மறுக்க முடியாது.

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த அழைப்பு தொடர்பில் திறைசேரியின் செயலாளர் ஆணைக்குழுவுடன் பேசி ஒரு தீர்மானத்தை எடுப்பார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் என்ற ரீதியில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் பலமுறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன். தேர்தல் திருத்தச் சட்டம்,தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு பல யோசனைகளை முன்வைத்துள்ளது. சுதந்திரமான முறையில் தேர்தலை நடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் பொறுப்பு.

கட்டுப்பணம் ஏற்றல் பணியில் இருந்து மாவட்ட செயலாளர்களை விலகிக் கொள்ளுமாறு அறிவிக்கும் தீர்மானத்தை அமைச்சரவை எடுக்கவில்லை. தவறுதலாக வெளியிட்ட அறிக்கையைப் பொதுநிர்வாக அமைச்சர் மறுகணமே திருத்திக்கொண்டார். தேர்தல் செயற்பாடுகளுக்குத் தடையேற்படுத்த வேண்டிய தேவை அரசுக்குக் கிடையாது.

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் நிறைவு பெறும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்கெடுப்புக்கான புதிய திகதி அறிவிப்புக்கு 21 நாள் காலவகாசம் வழங்கப்பட வேண்டும். தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு ஒரு தீர்மானத்தை எடுக்கும் என எதிர்பார்க்கின்றோம். தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் நாம் தலையிடப் போவதில்லை.

உள்ளூராட்சி சபைத் தேர்தல், மக்களின் ஜனநாயக வாக்குரிமை தொடர்பில் தற்போது போர்க்கொடி தூக்குபவர்கள் மாகாண சபைத் தேர்தலை மறந்து விட்டார்கள். கடந்த அரசு மாகாண சபை திருத்தச் சட்டத்தை உருவாக்கி மாகாண சபைத் தேர்தலை முழுமையாக இல்லாதொழித்துள்ளது. ஆகவே, மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்குத் தற்போதைய எதிர்க்கட்சிகள் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.