கோஸ்டி: சினிமா விமர்சனம்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் காஜல் அகர்வால். இவரை அமானுஷ்ய சக்திகள் பிடித்து ஆட்டுகின்றன. பிரபல ரவுடி கே.எஸ்.ரவிக்குமாரை கைது செய்ய வேண்டிய பொறுப்பும் அவருக்கு வருகிறது. கே.எஸ்.ரவிக்குமார் சிலரை கொலை செய்ய திட்டமிடுகிறார். அமானுஷ்ய சக்தியின் பிடியில் சிக்கிய காஜல் அகர்வால் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன?

அதில் இருந்து அவரால் மீள முடிந்ததா என்பது மீதி கதை. காஜல் அகர்வால் காக்கி உடையின் கம்பீரத்தையும் மீறி அழகாக இருக்கிறார். ரவுடிகளிடம் முரட்டுத்தனமாக விசாரிப்பது, மேல் அதிகாரிகளிடம் அசடு வழிவது என நடிப்பில் வித்தியாசம் காட்டி உள்ளார். அவருடைய நண்பர்களாக வரும் ஊர்வசி, சத்யன் இருவரும் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர். சிரிப்பு வில்லனாக வரும் கே.எஸ்.ரவிக்குமார் மாறுப்பட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார்.

யோகிபாபு, கிங்ஸ்லி, ஜெகன், நான் கடவுள் ராஜேந்திரன், தங்கதுரை, மனோபாலா, சுவாமிநாதன் என படத்தில் வரும் காமெடி நடிகர்கள் அனைவரும் சிரிப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறார்கள். குழந்தையை காணவில்லை என்று புகார் கொடுக்க வரும் கலைராணியும் தன் பங்கிற்கு சிரிக்க வைக்கிறார். ஜெய், ராதிகா ஆகிய இருவரும் சில காட்சிகளில் வந்தாலும் அனுபவ நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ஜேக்கப் ரத்தினராஜ் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார்.

சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது. பின்னணி இசை காமெடி கதைக்கு பொருத்தமாக இருக்கிறது. வழக்கமாக காமெடி படங்களுக்கு இருக்க வேண்டிய வேகம் இதில் கொஞ்சம் குறைவு. லாஜிக் மீறல்களும் நிறைய இருக்கிறது. தியேட்டருக்கு வரும் ரசிகர்களை சிரிக்க வைத்து அனுப்ப வேண்டும் என்ற முயற்சியில் வென்று இருக்கிறார் இயக்குனர் கல்யாண்.

Leave A Reply

Your email address will not be published.