மஹிந்த – பஸிலுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை இனி அமுலில் இல்லை என்று உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த உத்தர விடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச மற்றும் பஸில் ராஜபக்ச ஆகியோர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நவீன் மாரப்பன, நீதிமன்றில் முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைத்து, கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதிக்குப் பின்னர் தமது சேவை பெறுநகர்களுக்கு வழங்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் நீடிக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

இதைக் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரண நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், பிரதிவாதிகள் இருவருக்கும் விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை இனி அமுலில் இல்லை என்பதைக் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்குத் தெரிவிக்குமாறு உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.