அரசமைப்புப் பேரவைக்குள் சித்தார்த்தனை உடன் உள்வாங்குக! – சஜித் வலியுறுத்து.

அரசமைப்புப் பேரவைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனை உள்வாங்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்புப் பேரவையில் மூன்று சிவில் பிரதிநிதிகள் உட்பட 10 பேர் அங்கம் வகிக்க வேண்டும். இதுவரை 9 பேர்தான் இடம்பெற்றுள்ளனர். சிறுகட்சிகளின் சார்பில் சித்தார்த்தனின் பெயரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது. அதனை ஏற்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அவ்வாறு செய்யாவிட்டால் அது வடக்கு, கிழக்கு மக்களுக்கும் இந்நாட்டில் வாழும் சிறுபான்மை இன மக்களுக்கும் தவறான கருத்தைக் கொண்டு சேர்த்துவிடும் என்பதுடன், தவறான முன்னுதாரணமாகவும் அமைந்துவிடும்” – என்றார்.

அரசமைப்புப் பேரவையில் 3 சிவில் பிரதிநிதிகள் உட்பட 10 பேர் இடம்பெற வேண்டும்.

பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பதவி நிலை உறுப்பினர்கள். ஜனாதிபதியின் பிரதிநிதியாக நிமல் சிறிபாலடி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சியின் சார்பில் ஒருவர் தெரிவாக வேண்டும். அந்த இடத்துக்கே சித்தார்த்தனின் பெயரைக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.

எனினும், விமல் அணியும் தமது பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாலேயே இந்த விடயத்தில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.