13 ஐ நிறைவேற்றுமாறு இலங்கைக்கு இந்தியா விதிக்கும் நிபந்தனையை ஏற்கவே முடியாது! – ‘மொட்டு’ கூறுகின்றது.

“இந்தியா, இலங்கைக்கு நிபந்தனைகளை விதிக்கின்றது. நாட்டுக்கு ஒவ்வாத 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தச் சொல்கின்றது. இலங்கையில் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர் என்பதை இந்தியா உணர்ந்துகொள்ள வேண்டும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:–

“இலங்கைக்கு இந்தியா எவ்வளவு முக்கியமானதோ அதேபோல் சீனாவும் முக்கியம். இலங்கையின் அபிவிருத்தியில் சீனா பெரும் பங்கு வகிக்கின்றது. இந்தியாவும் தன்னால் இயன்ற உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருகின்றது. ஆனால், இந்தியா நிபந்தனைகளுடன்தான் உதவிகள் வழங்குகின்றது. சீனா இலங்கைக்கு நிபந்தனைகள் எதனையும் விதிப்பதில்ல.

இந்தியாவின் நிபந்தனைகள் அரசியல் நிபந்தனைகளாகும். இலங்கைக்கு ஒவ்வாத 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றுமாறு இலங்கைக்கு இந்தியா நிபந்தனை விதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் இலங்கையில் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் அதிகளவில் வாழ்கின்றார்கள் என்பதை இந்தியா மறக்கக்கூடாது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.