சூடானிலிருந்து இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் காவேரி என்ற திட்டத்தை தொடங்கிய மத்திய அரசு..!

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூடானிலிருந்து இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் காவேரி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான சண்டை 10 நாட்களாக நீடித்து வருகிறது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில், இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் காவேரி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஏற்கனவே சுமார் 500 இந்தியர்கள் சூடான் துறைமுகத்துக்கு வந்துள்ளதாகக் கூறி, அதுதொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அனைவரையும் மீட்டுவர உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, இந்தியர்களை மீட்பதற்காக சவூதி அரேபியாவில் இரண்டு விமானப்படை விமானங்களை சூடான் துறைமுகத்தில் கடற்படை கப்பலையும் இந்தியா தயார் நிலையில் வைத்துள்ளது. இந்நிலையில், 5 இந்தியர்களை பிரான்ஸ் விமானப்படை விமானம் மீட்டுவந்துள்ளது. இதேபோல, சவூதி அரேபியாவும் சில இந்தியர்களை மீட்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.