நேட்டோவில் இணைய உக்ரைன் போர் புரிகிறதா? அச்சத்தோடு உலகம்?

உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு வருகை தந்த நேட்டோ அமைப்பின் செயலாளர் நாயகம் யென்ஸ் சோல்ரன்பேர்க், நோட்டோவில் உக்ரைனை இணைத்துக் கொள்வதற்கு உறுப்பு நாடுகள் அனைத்தும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், தற்போது நடைபெற்றுவரும் போர் நிறைவுக்கு வந்ததும் உடனடியாகவே உக்ரைனை நேட்டோவில் இணைக்கும் பணி நிறைவேறும் எனவும் தெரிவித்துள்ளார்.

“போர் நிறைவுக்கு வரும்போது” என்ற சொல்லாடலின் ஊடாக அவர் சொல்லவருவது என்ன என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நேட்டோவின் அபரிமித ஆயுத, தளபாட, வழிகாட்டல் உதவிகளுடன் ரஸ்யா தோற்கடிக்கப்பட்ட பின்னர், போரில் வெற்றிபெற்ற உக்ரைன் நேட்டோவில் இணைத்துக் கொள்ளப்படும் என்பதே அவர் தெரிவிக்க முற்படும் செய்தி.

அணுவாயுத வல்லரசான ரஸ்யாவை அணுவாயுதம் எதனையும் கைவசம் வைத்திராத உக்ரைன் போரில் வெல்வது சாத்தியமா? தனது இருப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகும் போது அணுவாயுதத்தைப் பாவிக்கத் தயாராக உள்ளதாக ரஸ்யா அறிவித்தல் விடுத்த பின்னரும் கூட போரில் உக்ரைன் வெல்லும் என்ற நம்பிக்கை அல்லது போலி நம்பிக்கைக் கருத்தை சோல்ரன்பேர்க் முன்வைக்கக் காரணம் யாது?

14 மாதங்களைக் கடந்தும் தொடரும் உக்ரைன் போரில் ரஸ்யா பல புதிய பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளமையை நாம் அறிவோம். போரின் ஆரம்பத்தில் ‘அகலக் கால்’ பதிக்க முனைந்த ரஸ்யா ஒரு கட்டத்தில் தனது தந்திரோபாயத்தை மாற்றிக்கொண்டு முன்னர் கைப்பற்றிய சில பகுதிகளில் இருந்து பின்வாங்கியது. தொடர்ந்து, தற்போது வக்னர் குழுவினரின் உதவியுடன் மெதுமெதுவாக முன்னேறி வருகின்றது.

2014இல் உள்ளூர் போராட்டக் குழுவினரிடம் இழந்த பகுதிகளையே உக்ரைன் படையினரால் இதுவரை மீளக் கைப்பற்ற முடியவில்லை. தற்போது மேலதிகமாக ரஸ்யப் படைகளும் களத்தில் உள்ள நிலையில் உக்ரைன் படையினரால் கள நிலவரத்தை மாற்றியமைக்க முடியுமா என்ற ஐயம் எழுகிறது.

தற்போதைய போரில் நவீன தொழில்நுட்பம் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக ‘ட்ரோன்’ எனப்படும் சிறியரக ஆளில்லா விமானங்கள் இரண்டு தரப்பினராலும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வல்லரசான ரஸ்யாவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உக்ரைன் இந்தவகை தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி வருவதைப் பார்க்க முடிகின்றது. அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல வல்லரசு நாடுகளின் பின்புலமே இதற்குக் காரணம்.

தொழில்நுட்பம் மற்றும் ஆயுத வல்லமை என்பவை ஈடுகொடுக்கக் கூடியதாக இருப்பினும், போரின் போக்கைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு படையினரிடத்திலேயே உள்ளது. ரஸ்யாவோடு ஒப்பிடுகையில் உக்ரைனிடம் மனிதவலு குறைவாகவே உள்ளது. அதிலும் தற்போதைய போரில் ஒரு இலட்சம் வரையான படையினர் கொல்லப்பட்டு உள்ளதாக அண்மையில் அமெரிக்காவில் வெளியான இரகசிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக நன்கு பயிற்சி பெற்ற போர் அனுபவம் மிக்க படையினரை உக்ரைன் அதிக எண்ணிக்கையில் இழந்துள்ளது.

தற்போது, பெரிதும் எதிர்பார்க்கப்படும் எதிர்த்தாக்குதலை நடத்துவதற்கான முனைப்புகளில் உக்ரைன் ஈடுபட்டுள்ளது. மேலை நாடுகளில் அண்மைக்காலத்தில் பயிற்றுவிக்கப்பட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமான படையினர் இந்தத் தாக்குதல்களில் முக்கிய பங்கு வகிக்க உள்ளனர். மிகச் சரியாகச் சொல்வதானால், உக்ரைனிடம் கைவசம் உள்ள இறுதி வாய்ப்பு இது மாத்திரமே. இந்த வாய்ப்பு தவறவிடப்படுமானால் என்னவாகும் என்பதிலேயே உக்ரைனின் எதிர்காலம் பெரிதும் தங்கியுள்ளது.

ரஸ்யாவிடம் உள்ள அணுவாயுதத்தை எதிர்கொள்ளும் வல்லமை உக்ரைனிடம் இல்லை என்பது சிறுபிள்ளைக்கும் கூடத் தெரிந்த விடயம். உக்ரைனுக்கு ஆதரவாக, ரஸ்யாவுக்கு எதிராக அணுவாயுதத்தைப் பயன்படுத்தும் நிலையில் வேறு எந்தவொரு அணுவாயுத வல்லரசும் தயார் நிலையில் இருப்பதாகவும் தற்போதுவரை தெரியவில்லை. இந்நிலையில் எந்தத் தைரியத்தை வைத்துக்கொண்டு போரில் வெல்வது பற்றி உக்ரைனும், மேற்குலகும் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றன என்பது புரியாத புதிராகவே உள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு ரஸ்யா முன்வைத்த காரணங்களுள் ஒன்று அந்த நாடு நேட்டோவில் இணைவதைத் தடுப்பது என்பதாகும். ஒரு வருடத்துக்கு முன்னதாக ரஸ்யா அந்தக் கருத்தைத் தெரிவித்தபோது அந்தக் கருத்தை மறுதலித்திருந்த மேற்குலகம் தற்போது அந்தக் கருத்தை வலியுறுத்தி இருப்பதானது ரஸ்யாவின் முன்னைய கருத்தை ஏற்றுக் கொள்வது போன்றதே. அது மாத்திரமன்றி, அது ஆபத்தானதும் கூட.

தனது வல்லாதிக்கக் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியில் உக்ரைனை மாத்திரமன்றி ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் கூடப் பலி கொடுப்பதற்கு அமெரிக்கா தயாராகவே உள்ளது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

இந்நிலையில் சீன அதிபர் ஜி ஸின்பிங் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். உக்ரைன் மோதல் ஆரம்பித்த பின்னர் முதல் தடவையாக சீன அதிபர் உக்ரைன் அதிபரோடு தொடர்பு கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“அணுவாயுதப் போர் ஒன்று நடைபெறுமானால் யாருமே வெல்லப் போவதில்லை” என சீன அதிபர் கூறியதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. அவருடைய கூற்று உணர்த்துவது எதனை? அணுவாயுதங்களைப் பாவிக்கும் எண்ணம் ரஸ்யாவிடம் உள்ளதா? அல்லது உக்ரைன் சார்பாக மேற்குலக அணுவாயுத வல்லரசு ஒன்று அணுவாயுதத் தாக்குதல்களை நடத்த முனைகிறது என அவர் எண்ணுகிறாரா?

இரண்டில் எது நடைபெற்றாலும் அது ஒட்டுமொத்த உலகின் அழிவுக்கே வழிசமைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

ஜி ஸின்பிங் அவர்களின் கூற்றை வேறு கோணத்திலும் பார்க்க முடியும். இவ்வருடம் பெப்ரவரி மாதத்தில் உக்ரைன் மோதலுக்குத் தீர்வுகாணும் நோக்குடன் 12 அம்ச திட்டமொன்றை சீனா முன்மொழிந்திருந்தது. அது மாத்திரமன்றி, ரஸ்யாவுக்கு வருகை தந்த ஜி ஸின்பிங் அங்கு அதிபர் விளாடிமிர் புட்டினோடு பேச்சுவார்த்தைகளையும் நடத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து சீனா ரஸ்யாவுக்கு ஆயுத தளபாட உதவிகளை வழங்க முனைகிறது என்ற குற்றச்சாட்டு அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டு இருந்தது. இந்தக் குற்றச்சாட்டை சீனா அடியோடு மறுத்திருந்தது.

அமெரிக்காவின் தொடர்ச்சியான போக்குகள் உலகை இரண்டு முகாம்களாக மாற்றி வருவதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில், சீனா தனது தலையிடாக் கொள்கையை மாற்றிக்கொண்டு உக்ரைன் போரில் ரஸ்யாவுக்கு உதவ முனைகிறதா? அதன் தொடக்கமாகவே, தீர்வுத் திட்ட முன்மொழிவும், ஸெலன்ஸ்கியுடனான தொலைபேசி உரையாடலும் அமைகிறதா என்ற கேள்வி எழுகின்றது.

போர் என்றுமே கொடியது. போருக்கான காரணம் எதுவாக இருந்தாலும், அந்தக் காரணம் நியாயமானதாகக் கூட இருந்தாலும் போரின் விளைவு பேரழிவாகவே அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனவே, போர்கள் எப்போதும் தடுக்கப்பட்டே ஆக வேண்டியவை. உக்ரைன் போரும் அதில் விதிவிலக்கானதாக இருக்க முடியாது. அதுவொன்றும் நிறுத்தப்பட முடியாத போரும் அல்ல.

ஆனால், முதல் அடியை யார் எடுத்து வைப்பது என்பதில்தான் பிரச்சனை. இந்தப் போர் இரண்டு நாடுகளுக்கு மாத்திரம் இடையிலானது என்றால் எப்போது முடிவுக்கு வந்திருக்கும். அவ்வாறு இல்லாததே இந்தப் போர் நீடிப்பதற்குக் காரணம் எனலாம்.

Leave A Reply

Your email address will not be published.