அமெரிக்க டொலரின் செல்வாக்கு நிலைக்குமா? சரியுமா? (அலசல்)

இன்றைய தருணத்தில் உலகின் பெரும்பாலான நாடுகள் தமக்கிடையேயான வர்த்தக நடவடிக்கைகளுக்காகப் பாவிக்கும் நாணயமாக இருப்பது அமெரிக்க டொலர்.

உலகப் பொது நாணயமாகக் கருதப்படும் டொலர் இந்த இடத்தைப் பிடிப்பதற்குக் காரணமாக அமைந்தது இரண்டாம் உலகப் போர்.

Pearl Harbor Attack, December 7, 1941

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா நேரடியாகப் பங்கு கொண்டிருந்தாலும், அந்தப் போர் அமெரிக்க மண்ணில் நடைபெறவே இல்லை. பேர்ள் துறைமுகம் மீது யப்பான் நடாத்திய தாக்குதல் ஒன்றே அந்த மண்ணில் இடம்பெற்ற ஒரேயொரு போர் நடவடிக்கை எனக் கூற முடியும்.

பிரதானமாக ஐரோப்பாவிலும், ஆசியா மற்றும் ஆபிரிக்காவிலும் நடைபெற்ற இந்தப் போரில் பங்கு கொண்டிருந்த நாடுகள் யாவுமே பொருளாதார அடிப்படையில் பாரிய அழிவைச் சந்தித்திருந்தன. போர்க் காலத் தேவைகள், போருக்குப் பிந்திய புனர்நிர்மாணம் என நிதித்தேவை அதிகமாக இருந்தது.

அன்றைய காலகட்டத்தில் நிலவிய அரசியல் ஸ்திரமின்மையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்க வல்லாதிக்கம் உலக வர்த்தக நாணயமாக டொலரை அறிமுகம் செய்து கொண்டது. அன்றிலிருந்து இன்றுவரை தனது ஏகபோகத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுவரும் அமெரிக்க ஆளும் வர்க்கம் தனக்குத் தேவையான வேளைகளில் எல்லாம் டொலரை ஒரு ஆயுதமாகப் பாவித்து வந்துள்ளது.

தத்தமெக்கென தனியான நாணயத்தைக் கொண்டுள்ள நாடுகள் தம்மிடம் உள்ள சொத்தின் இருப்புக்கு அமையவே நாணயங்களை அச்சிட்டு புழக்கத்தில் விடுவது வழக்கம். ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை அத்தகைய கட்டுப்பாடு எதுவும் இல்லை. அமெரிக்காவின் அளவீடும் வேறுபட்டது.

உலக வர்த்தக நாணயமாக உள்ள டொலர் அமெரிக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் உலக வர்த்தகத்தையே கட்டுப்படுத்தும் வல்லமை அமெரிக்கா வசம் உள்ளது. வல்லாதிக்கச் சிந்தனை கொண்ட அமெரிக்க ஆளும் வர்க்கம் தம்மிடம் உள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனக்குச் சாதகமான நாடுகளுக்கு சலுகைகளையும், தனக்குப் பிடித்தமில்லாத அரசாங்கங்களுக்கு பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகின்றது.

அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு சந்தர்ப்பங்களில் விமர்சனங்களும் கண்டனங்களும் முன்வைக்கப்பபட்டு வந்திருந்தன. அண்மைக் காலத்தில் ரஸ்யா மீது அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் அடுக்கடுக்காக விதித்த பொருளாதாரத் தடை நடவடிக்கைகள் ரஸ்யாவை மட்டுமன்றி வேறு பல நாடுகளையும் இது தொடர்பில் தீவிரமாகச் சிந்திக்கச் செய்துள்ளது.

அதன் விளைவாக தமக்கிடையேயான வர்த்தக நடவடிக்கைகளில் டொலரைத் தவிர்த்து தத்தம் நாட்டு நாணயங்களைப் பாவிப்பது என அவை முடிவு செய்துள்ளன.

உலகின் பொருளாதார வல்லரசாக இன்றுவரை அமெரிக்காவே உள்ளது.

இந்த முதலாமிடம் அண்மைக் காலம் வரை எந்தவித சவால்களையும் எதிர்கொள்ளாமல் இருந்த நிலை தற்போது மாற்றம் கண்டுள்ளது.

அனைத்துத் துறைகளிலும் துரித முன்னேற்றம் கண்டுவரும் சீனா இன்று அமெரிக்காவின் முதலாம் இடத்தைத் தட்டிப் பறித்துவிடக் கூடும் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. தனது இடத்தை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் உள்ள அமெரிக்கா சீனாவை எப்படியாவது ஒரு போரிலாவது ஈடுபடுத்திவிடத் துடியாய்த் துடிக்கின்றது.

குறிப்பாக, தாய்வான் விவகாரத்தில் சீனாவைப் போரில் ஈடுபடுத்திவிட்டால் சீனாவில் ஒரு பொருளாதார வீழ்ச்சி ஏற்படக் கூடும், அதனால் சீனாவின் முன்னேற்றம் பாதிக்கப்படும் என அமெரிக்கா கணக்கிட்டுச் செயற்படுகின்றது. அமெரிக்கச் சதியை நன்கு புரிந்து வைத்துள்ள சீனா தாய்வான் விவகாரத்தில் போரைத் தவிர்த்து வருகின்றது.

மறுபுறம், உலகப் பொருளாதார வல்லரசு அந்தஸ்தை நோக்கி நடைபோடும் சீனா, டொலரில் தங்கியிருக்கும் நிலையை மாற்ற நினைக்கிறது. உலகின் பெரும்பாலான நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் சீனா அந்த வர்த்தகத்தினை டொலர் அல்லாத நாணயம் மூலம் நடத்த விரும்புகிறது. டொலருக்குப் பதிலாக தனது சொந்த நாணயமான யுவானை அது முன்மொழிகிறது.

அமெரிக்காவுக்குப் பிடித்தமில்லாத நாடுகள் மட்டுமன்றி அமெரிக்காவின் நட்பு நாடுகள் எனக் கருதக்கூடிய நாடுகள் சிலவும் கூட இத்தகைய முடிவை எடுத்துவரும் நிலையில் டொலரின் மதிப்பு உலக அரங்கில் சரிவைச் சந்திக்கும் நிலை தோன்றியுள்ளது.

இறுதியாக வெளிவந்த செய்திகளின் படி அமெரிக்க நட்புநாடான தென்கொரியா இந்தோனேசியாவுடனான வர்த்தக நடவடிக்கைகளில் உள்நாட்டு நாணயங்களைப் பயன்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. இதுபோன்ற ஒரு ஒப்பந்தந்தை பிரேசிலும் ஆர்ஜென்ரீனாவும் செய்துகொள்ள உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

உலகின் செல்வந்த நாடுகள் வரிசையில் உள்ள 7 நாடுகள் இணைந்து ஜி-7 என்ற ஒரு கட்டமைப்பை வைத்துள்ளன. அதன்மூலம் உறுப்பு நாடுகளுக்கிடையேயான வர்த்தக நடவடிக்கைகளில் வரிவிலக்கு அல்லது வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகின்றன. அது மாத்திரமன்றி, தமது கொள்கைகளுக்கு இணங்கிப் போகாத நாடுகள் மீது பொருளாதார அடிப்படையிலான அழுத்தங்களையும் பிரயோகித்து வருகின்றன.

இதற்கு மாற்றாக சீனா, ரஸ்யா, இந்தியா, பிரேசில், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து பிரிக்ஸ் என்ற ஒரு கட்டமைப்பை வைத்துள்ளன.

இந்த அமைப்பில் உள்ள நாடுகள் தமக்கிடையேயான வர்த்தகத்தில் வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகின்றன. அத்துடன் பொதுவான வர்த்தகத்தில் அமெரிக்க டொலரைக் கைவிட்டு உள்நாட்டு நாணயத்தை பிரதியீடு செய்யும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளன.

ஆர்ஜென்ரீனா, இந்தோனேசியா, சவூதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்தக் கட்டமைப்பில் இணைந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கட்டமைப்பில் ஏலவே உள்ள அல்லது எதிர்காலத்தில் இணைந்து கொள்ளப்போகும் நாடுகளில் உலக சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில், உலகின் அரைவாசி மக்கள் டொலர் வர்த்தகத்தைக் கைவிடும் நிலை தோன்றியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொறுத்தவரை இது மிக மோசமான செய்தி.

இன்றைய உலகில் அதிக நாடுகளில் பொதுப்பாவனையில் உள்ள ஒரேயொரு நாணயம் என்றால் அது ஈரோ மாத்திரமே.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான உறுப்பு நாடுகளில் இது பயன்பாட்டில் உள்ளது. இத்தகைய ஒரு நாணயம் – டொலருக்குப் போட்டியாக உருவான போது , அதனைத் தடுத்துவிட முடியாத நிலையில் அமெரிக்கா ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் இதேபோன்ற ஒரு நாணயத்தை உருவாக்க நினைத்த ஆபிரிக்க ஒன்றியத்தால் அது முடியாமல் போய்விட்டது. அத்தகைய ஒரு நாணயத்தை டொலருக்கு மாற்றாக உருவாக்க முனைந்த லிபிய அதிபர் கேணல் முஅம்மர் கடாபி என்னவானார் என்பது உலகம் அறிந்த சேதி.

இப்போதும் கூட சீனா, ரஸ்யா உள்ளிட்ட நாடுகள் டொலரைக் கைவிடுவதை அமெரிக்கா கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்பது அமெரிக்காவின் கடந்தகால வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

ஆனால், கேணல் கடாபியின் லிபியாவைப் போன்று இந்த நாடுகளைக் கையாளுவது என்பது லேசுப்பட்ட விடயமல்ல என்பதே கசப்பான உண்மை.

Leave A Reply

Your email address will not be published.