கர்நாடகாவில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று , காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு, கடந்த 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 73.19 சதவிகித வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணத் தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது.

பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக 66 இடங்களைப் பெற்று ஆட்சியை இழந்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக வெற்றியை கொண்டாடினர்.

இதற்கிடையே ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி மற்றும் பாஜக வேட்பாளர் சி.கே. ராமமூர்த்தி இடையே கடும் போட்டி நிலவியது. பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்துமாறு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்ற காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமாரும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாஜக வேட்பாளர் சி.கே.ராமமூர்த்தி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.