வடக்கு – கிழக்கில் புத்தர் சிலை நிறுவ முடியாது என்று எந்தச் சட்டத்தில் உள்ளது? – இப்படிக் கேட்கிறார் வீரசேகர.

“விகாரைகளை நிறுவுவதற்கும் புத்தர் சிலைகளை வைப்பதற்கும் வடக்கு – கிழக்கில் அனுமதியில்லை என்று எந்தச் சட்டத்தில் உள்ளது?”

இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர.

திருகோணமலையில் நேற்று நிறுவப்படவிருந்த புத்தர் சிலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் வடக்கு – கிழக்குக்கு ஒரு சட்டம் என்றும், தெற்கில் இன்னொரு சட்டம் என்றுமில்லை. பொதுவாக ஒரு சட்டம் தான் உண்டு.

சிங்கள – பௌத்தர்கள் நாட்டில் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக வழிபட முடியும். அவர்கள் விகாரைகளையும், புத்தர் சிலைகளையும் எந்த இடத்திலும் நிறுவ முடியும். அதை இனவாத, மதவாத அடிப்படையில் நோக்குவதை தமிழ்த் தரப்பினர் தவிர்க்கவேண்டும்.

தமிழ் மக்கள் நாட்டில் எங்கும் சென்றும் வழிபடலாம். அவர்கள் எங்கும் ஆலயங்களை அமைக்கலாம். இதற்கு எதிராக சிங்கள மக்கள் அன்றும் சரி இன்றும் சரி எதிர்ப்புக் காட்டவில்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.