மேல் மாகாண நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உப குழு மற்றும் புதிய நிறுவனம்!

மேல்மாகாண அபிவிருத்தி தொடர்பான சுபானா ஜூரோங் (Surbana Jurong) திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதாகவும், அந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த புதிய நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமார் 50 சதவீத பங்களிப்பை வழங்கும் மேல்மாகாணத்தை முறையான நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக விரிவான அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, முறைசாரா நகர அபிவிருத்தி, பிற்காலத்தில் கட்டுப்படுத்த முடியாத நிலைமையாக மாறும் எனவும் சுட்டிக்காட்டினார்.

மேல்மாகாண நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்துக்கான அபிவிருத்தித் திட்டத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேல்மாகாண அபிவிருத்தி தொடர்பான முதலாவது திட்டத்தை, 1997ஆம் ஆண்டு அமைச்சர் இந்திக குணவர்தன முன்வைத்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதன் பின்னர் சிங்கப்பூரின் சுபானா ஜூரோங் (Surbana Jurong) நிறுவனம் 2004ஆம் ஆண்டு முன்வைத்த திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தார்.

அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்த நிறுவனத்தினால் குறித்த திட்டம் மீண்டும் மறுசீரமைத்து வழங்கப்பட்டதுடன், இத்திட்டம் தொடர்பில் அனைவருடனும் கலந்துரையாடி, தேவைப்பட்டால் கூடுதல் மறுசீரமைப்புகளுடன் மேல் மாகாணத்திற்கு தேவையான அடிப்படை அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் உடனடித் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மேல் மாகாணத்தில் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பிரதான அபிவிருத்தித் திட்டமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இங்கு கையளிக்கப்பட்டது.

இந்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு அவசியமான காணி விடுவிப்பு மற்றும் காணி சுவீகரிப்பு தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. அந்தப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, பிரசன்ன ரணதுங்க, பந்துல குணவர்தன, விஜயதாச ராஜபக்ஷ, நளின் பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உட்பட அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.