நடிகர் சரத்பாபு காலமானார்

பிரபல நடிகர் சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். 1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. அதன்பின்னர்,

தமிழில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமானார். 70,80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த அவர், நடிகர் கமல், மற்றும் ரஜினி, சிவாஜி, சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. நடிகர் சரத்பாபு மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சினிமாவில் கடந்து வந்த பாதை

1980களில் தமிழ் திரையுலகில் நல்ல நண்பன், சகோதரன், மகன், அதிகாரி, முதலாளி போன்ற கதாபாத்திரங்கள் என்றாலே, சினிமாவை நேசிக்கும் நம் அனைவரின் நினைவிற்குள்ளும் சட்டென வருபவர் நடிகர் சரத்பாபு.

ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், 1951ம் ஆண்டு ஜுலை 31ல் அமதலவலசா என்ற ஊரில் பிறந்தார். இவரது நிஜப்பெயர் சத்யம் பாபு தீக்ஷித்துலு. தனது கல்லூரி காலங்களில் ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தார். கிட்டப் பார்வை குறையால் அந்த ஆசை அவருக்கு நிராசையானது. நல்ல உயரம், நிறம், சினிமாவிற்கு ஏற்ற முகத் தோற்றம் கொண்ட இவருக்குள் இருந்த நடிகனை அடையாளம் கண்டு, இவரை சினிமா பக்கம் திரும்பச் செய்தது இவரது கல்லூரி நண்பர்களும், பேராசிரியர்களுமே.

1973ல் “ராம ராஜ்யம்” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகராக வெள்ளித்திரையில் அறிமுகமானார். பின் 1977ல் இயக்குநர் கே பாலசந்தரால் “பட்டினப்பிரவேசம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். ஆனால் தமிழில் இவர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் இயக்குநர் கே பாலசந்தரின் “நிழல் நிஜமாகிறது”. இதில் கமல்ஹாசனின் நண்பராக நடித்தார்.

தொடர்ந்து “வட்டத்துக்குள் சதுரம்”, “முள்ளும் மலரும்”, “அகல் விளக்கு”, “நினைத்தாலே இனிக்கும்”, “நெஞ்சத்தைக் கிள்ளாதே” என ஏராளமான தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தமிழில் பிஸியான நடிகராக வலம் வந்தார். “திசை மாறிய பறவைகள்”, “பொன்னகரம்”, “உச்சகட்டம்”, “பாலநாகம்மா”, “கண்ணில் தெரியும் கதைகள்”, “நதியை தேடிவந்த கடல்”, “மெட்டி” போன்ற திரைப்படங்கள் இவர் நாயகனாக நடித்து தமிழில் வெளிவந்தவை.

ஜெயலலிதாவின் கடைசி தமிழ் பட ஹீரோ

நடிகையும், முன்னாள் முதல்வருமான மறைந்த ஜெயலலிதா கடைசியாக தமிழில் நடித்து வெளிவந்த “நதியை தேடிவந்த கடல்” என்ற திரைப்படத்தின் நாயகன் சரத்பாபு தான். “கீழ்வானம் சிவக்கும்”, “தீர்ப்பு”, “இமைகள்”, “சந்திப்பு”, “சிரஞ்சீவி”, “எழுதாத சட்டங்கள்” என பல வெற்றிப் படங்களில் நடிகர் சிவாஜி கணேசனோடு இணைந்து நடித்த பெருமையும் இவருக்குண்டு.

ரஜினி பட நண்பன்

ரஜினியோடு இவர் இணைந்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் தமிழ் திரைப்பட ரசிகர்களால் பெரிதும் ஆராதிக்கப்பட்டவை. “முள்ளும் மலரும்”, “நெற்றிக்கண்”, “வேலைக்காரன்”, “அண்ணாமலை”, “முத்து” போன்ற ரஜினியின் படங்களில் இவரது கதாபாத்திரமும், கதாபாத்திரத்தின் பெயர்களும், இன்றும் தமிழ் ரசிகர்கள் மனங்களில் நிலைத்து நிற்கின்றன.

1981ல் இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த “நண்டு” திரைப்படத்தில் நாயகன் சுரேஷிற்கு டப்பிங் பேசியது சரத்பாபுவே. “அலைகள் ஓய்வதில்லை” திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான “சீதாகோக சிலகா” என்ற படத்தில், தமிழில் நடிகர் தியாகராஜனின் கதாபாத்திரத்தை தெலுங்கில் நடிகர் சரத்பாபு நடித்து, பாராட்டையும் பெற்றதோடு, அந்த ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருதினையும் வென்றுள்ளார்.

சினிமா தவிர்த்து, சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்ததன் மூலம், சின்னத்திரை ரசிகர்களின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்தார் சரத்பாபு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஏறக்குறைய 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கும் சரத்பாபு, கடைசியாக தமிழில் “வசந்த முல்லை” என்ற படத்தில் நடித்தார்.

8 முறை நந்தி விருது

ஆந்திர மாநில சினிமா விருதான நந்தி விருதை எட்டு முறை வென்றுள்ளார். இதுதவிர “தமிழ்நாடு அரசு சினிமா விருது” என பல விருதுகளையும் வென்றுள்ளார். பழம்பெரும் நடிகை ரமாபிரபாவை 1974ல் திருமணம் செய்த இவர், 1988ல் அவரை பிரிந்தார். பின்னர் 1990ல் சினேகா நம்பியாரை மணந்த இவர் 2011ல் அவரையும் பிரிந்தார்.

சரத்பாபுவின் மறைவு தென்னிந்திய திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.