மீண்டும் டுபாய் பறந்தார் ‘தங்கம்’ கடத்தல் மன்னன்.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மீண்டும் டுபாய் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஃப்ளை டுபாய் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் நேற்று அவர் டுபாய் பயணமானார் என்று தெற்கு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து வினவுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமைத் தொடர்புகொள்ள பல தடவைகள் முயற்சித்த போதிலும், அவருடைய கைத்தொலைபேசி இயங்காமையால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

3.5 கிலோ கிராம் தங்கம் மற்றும் 91 கைபேசிகளை, டுபாயிலிருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டுவந்த குற்றச்சாட்டில், முஸ்லிம் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளால், கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர், 75 இலட்சம் ரூபா அபராதம் விதித்து அவர் விடுவிக்கப்பட்டார்.

எனினும், அவர் கொண்டுவந்த தங்கம் மற்றும் கைபேசிகள் அரசுடமையாக்கப்பட்டன.

குறித்த தங்கம் மற்றும் கைபேசிகள், தம்முடையதல்ல என்றும், அது தம்முடைய நண்பருடையதாகும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர, இதுபோன்ற விடயங்கள் தொடர்பில், அவசியமான சட்டங்கள் எதிர்காலத்தில் கொண்டுவரப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென விசேட சிறப்புரிமை அவசியம் இல்லை. அதேபோன்று, நாடாளுமன்ற உறுப்பினருக்கு உள்ள சிறப்புரிமையைப் பயன்படுத்தி, இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுமானால், குறித்த நபரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்” என்றும் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்ரசேன, தங்கம் அரசுடமையாக்கப்பட்டு, 75 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், பிரச்சினை முடிவுறுத்தப்படக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குற்றம் இழைக்கப்பட்டால், சிறைத் தண்டனை அல்லது வேறு தண்டனை விதிப்பது குறித்து, சம்பந்தப்பட்ட தரப்பு அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.