விசா மோசடியை அம்பலப்படுத்திய இளைஞருக்கு நெருக்கடி கொடுத்தால் பெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும்! – அரசுக்கு ஜே.வி.பி. கடும் எச்சரிக்கை.

“விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை தனி ஒருவனாக இளைஞர் ஒருவர் அமபலப்படுத்தியுள்ளார். எனவே, தவறுகளை அரசு திருத்திக்கொள்ள வேண்டும். அதனை விடுத்து அந்த இளைஞருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தினால் அரசு மீண்டும் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். அரசுக்கு எதிராக மீண்டும் சட்டத்தரணிகளும் மக்களும் ஒன்றிணைவார்கள்.”

இவ்வாறு ஜே வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எச்சரித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07) உரையாற்றும்போதே இந்த எச்சரிக்கையை விடுத்த அவர், மேலும் பேசுகையில்,

“வெளிநாட்டவர்களுக்கான விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை இளைஞர் ஒருவர் தனி ஒருவனாக வெளிப்படுத்தியுள்ளார். அரசமைப்பால் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை அந்த இளைஞர் பயன்படுத்தியுள்ளார். அந்த இளைஞர் குறிப்பிட்ட விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியமை தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்தியதன் பின்னரே அமைச்சரவை பழைய முறைக்கு விசா விநியோகிக்கத் தீர்மானித்துள்ளது.

எனவே, அரசு தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். அதனை விடுத்து அந்த இளைஞருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் சட்டத்தரணிகளும், நாட்டு மக்களும் அந்த இளைஞருக்குச் சார்பாகச் செயற்படுவார்கள். அரசுக்கு எதிராக மீண்டும் ஒன்றிணைவார்கள். அரசு மீண்டும் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். கடந்த கால நிகழ்வுகளை அரசு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.