அதிக விளைச்சலுக்காக மது தெளிக்கும் பருப்பு விவசாயிகள்!

மத்திய பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் அதிக விளைச்சலுக்காக மதுவை தண்ணீரில் கலந்து பருப்பு பயிர்களின் மீது விவசாயிகள் தெளிக்கின்றனர்.

மதுவை பருப்பு பயிரின் மீது தெளிப்பதால் அதிக விளைச்சல் ஏற்படும் என்ற எந்தவித அறிவியல்பூர்வ கண்டுபிடிப்புகள் இல்லாவிட்டாலும், இவை பலன் தருவதாக கிராமப்புற விவசாயிகள் நம்புகின்றனர்.

நர்மதாபுரம் மாவட்டம், பிபரியா மற்றும் சோஹாக்பூர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் கோடைக் காலங்களில் பாசிப் பருப்பு மற்றும் மஞ்சள் சாகுபடி செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விலை உயர்ந்த பூச்சிக் கொல்லி மருந்துக்கு பதிலாக தண்ணீர் கலந்த மதுவையே உபயோகிக்கின்றனர்.

இதுகுறித்து நயகேடா கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வரும் பிரேம்சங்கர் படேல் கூறுகையில், “பாசிப் பருப்பு விளைச்சலுக்கு பூச்சிக் கொல்லி மருந்து உபயோகித்தால் ரூ.1,900 வரை செலவாகும். ஆனால், தண்ணீருடன் மதுவை கலந்து உபயோகிக்கும் பட்சத்தில் ரூ. 200 முதல் 250 வரை மட்டுமே செலவாகிறது. அதுமட்டுமின்றி கடந்த மூன்று முறையும் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது” என்றார்.

மற்றொரு விவசாயி காசிராம் கூறுகையில், “பாசிப் பருப்பு விளைச்சலுக்கு 10 முதல் 15 லிட்டர் தண்ணீரில் 50 முதல் 100 மில்லி லிட்டர் மதுவை கலந்து தெளிப்போம்” எனத் தெரிவித்தார்.

மேலும், ஜவர்ஹலால் நேரு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானி எஸ்.பி. அகர்வால் கூறுகையில், “இதற்கு பூச்சியல் துறையில் எந்த ஆதாரமும் இல்லை. விவசாயிகள் குழப்பத்தினால் அல்லது தவறான நம்பிக்கையால் இதுபோன்று செய்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.