கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு… சூடுபிடிக்கும் சிபிசிஐடி விசாரணை…!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு 1500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையின் நகல், உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சிபிசிஐடி காவல் துறையினர் கேரளாவிலும் விசாரணையை தொடங்கியுள்ளனர். வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட வாளையாறு மனோஜ், 9-ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சந்தோஷ் சாமி ஆகியோரின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

கோடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்ட சம்பவத்தில் வாளையாறு மனோஜ் அணிந்திருந்த ஆடையில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரி முக்கிய சாட்சியமாக பார்க்கப்படும் நிலையில், கேரளாவில் திருச்சூர் நந்திகரா பகுதியில் உள்ள மனோஜ் வீட்டில் வைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மேலும், கொள்ளை கும்பல் காரை வாடகைக்கு எடுத்ததாகக் கூறப்படும் மலப்புரத்தில் உள்ள டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரிடமும் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.