ரஷியாவுக்கு அணு ஆயுதம் குறித்த தரவுகள் பரிமாற்றம் செய்யப்படாது: அமெரிக்கா பதிலடி.

அணு ஆயுதங்களை குறைப்பதற்காக New START (Strategic Arms Reduction Treaty) அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் அமெரிக்கா- ரஷியா இடையே ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அணு ஆயுதம் எங்கு உள்ளது. எங்கிருந்து ஏவப்படுகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை போன்ற தரவுகளை பகிர்வது. அணு ஆயுதம் எண்ணிக்கை அதிரிகரிப்பதை தடுப்பது. இரு நாடுகளும் தங்களுக்குள் தரவுகளை பகிர்ந்து கொண்டிருந்தன.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததில் இருந்து அமெரிக்கா- ரஷியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. பல்வேறு நாடுகளை ஒன்றிணைத்து (குறிப்பாக நேட்டோ நாடுகள்) அமெரிக்கா பல்வேறு தடைகளை ரஷியா மீது சுமத்தியது. மேலும், அமெரிக்கா உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்கியது. இதனால் உக்ரைன் மீதான போரை முழுமையான வெற்றி என்று ரஷியா கூறமுடியவில்லை. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியாவின் முக்கிய நோக்கம் முறியடிக்கப்பட்டுள்ளது என நேட்டோ நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா அறிவித்ததும் புதின் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இதனால் ஒப்பந்தத்தை ரஷியா இடைநிறுத்தியது. இதன்மூலம் ரஷியா அணு ஆயுத தரவுகளை அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டியதில்லை எனக் தெரிவித்தது.

இந்த நிலையில், அமெரிக்கா பதிலடி கொடுக்கும் வகையில் நாங்களும் அணு ஆயுதம் குறித்த தரவுகளை கொடுப்பதில்லை என முடிவு செய்துள்ளது. இதுகுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியதாவது:- அமெரிக்கா அணு ஆயுதம் குறித்த தகவல், இருக்கும் இடம் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்காது. ஆனால், கண்டம் விட்டு கண்டம் பாயும், நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் குறித்த தகவல்களை தொடர்ந்து ரஷியாவுக்கு தகவல் கொடுப்போம். அமெரிக்க பிராந்தியத்தில் ரஷியாவின் ஆய்வுக்குழு, அவர்களுக்கான விசா வழங்கும் முறை, START தொடர்பாக ஆய்வு நடத்துவது, விமானப்படையினர் ஆகியோருக்கும் தடைவிதிக்கப்படுகிறது. ரஷியா ஆய்வு விமானங்களுக்கான டிப்ளோமெட்டிக் அனுமதிக்கும் தடைவிதிக்கப்படுகிறது.

கண்டம் விட்டு கண்டம் பாயும், நீர் மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் குறித்த டெலிமெட்ரிக் தகவல்களும் வழங்கப்படாது. இது ஏவுகணை பரிசோதனை செய்யப்படும் விமானத்தில் இருந்து கிடைக்கும் தகவல். இரு நாடுகளும் இந்தத் தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தன. START ஒப்பந்தத்தை ரஷியா மீறியதற்காக பதில் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஷியா ஒப்பந்தத்தை மீறியது சட்டப்பூர்வமாக செல்லாது.

ரஷியா இந்த ஒப்பந்தத்தின்படி நடந்து கொள்ள சம்மதம் தெரிவித்தால், நாங்களும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளது. ரஷியாவும், அமெரிக்காவும் உலகின் 90 சதவீத அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துகின்றன. START ஒப்பந்தம் அணு ஆயுதங்களை குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். 2010-ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. 2026-ல் காலாவதியாகிறது. இந்த ஓப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அமெரிக்கா, ரஷியா 1550 அணு ஆயுதங்கள், நிலம் மற்றும் கடலுக்கு அடியில் இருந்து தாக்கும் ஏவுகணைகள் 700-க்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்பதுதான்.

Leave A Reply

Your email address will not be published.