கஜேந்திரகுமார் கட்சியின் இருவர் கைது!கஜேந்திரகுமாருக்கு பயண தடை

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) மகளிர் அரசியல் பிரிவின் தலைவி சற்குணாதேவி ஜெகதீஸ்வரன் மற்றும் மற்றுமொரு ஆதரவாளர் பி.உதயசிவம் ஆகியோர் கடந்த 5ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினருடன் சென்று க.பொ.சாதாரணதர பொதுப் பரீட்சை நடைபெறும் பாடசாலையின் அருகே கூட்டம் நடத்தியமை மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கிளிநொச்சி மருதங்கேணி பொலிஸார் இவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

அவர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட கிளிநொச்சி நீதவான், அன்றைய தினம் அவர்களின் மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மருதங்கேணி பொலிஸார் நீதிமன்றில் சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை முன்னிலைப்படுத்தியதை அடுத்து, போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி மருதங்கேணி பொலிஸில் வாக்குமூலம் பதிவு செய்ய வருமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நாடாளுமன்ற அமர்வில் பங்குபற்ற இருப்பதால் தான் கொழும்பு செல்வதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதன் பின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் கொழும்பு இல்லத்திற்கு சென்ற கொள்ளுப்பிட்டி பொலிஸார், நீதிமன்ற தடை உத்தரவை அவருக்கு வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மருதங்கேணி பொலிஸில் முன்னிலையாகும் வரை எனக்கு வெளிநாட்டு பயணத்தை தடை செய்யுமாறு கிளிநொச்சி நீதவானிடம் பொலிஸார் விண்ணப்பித்துள்ளதுடன், நான் பொலிஸ் நிலையத்தில் அறிக்கையிடும் வரை வெளிநாட்டுப் பயணம் தடை செய்யப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார் என சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.