ஆப்கானிஸ்தானில் கல்யாண மண்டபங்களில் இசை நிகழ்ச்சிகளுக்கு தடை.

ஆப்கானிஸ்தான் நாட்டைவிட்டு அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் 2021-ல் வெளியேறியவுடன், தலிபான் அங்கு ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து, கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பெண்களின் சுதந்திரம் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டது. பெண் குழந்தைகள் பள்ளிகள், கல்லூரி செல்வதும், பெண்கள் அலுவலகங்களுக்கு செல்வதும் தடை செய்யப்பட்டு விட்டது. இது மட்டுமில்லாமல், கேளிக்கைகளில் ஈடுபடுவது மதத்திற்கு எதிரான குற்றம் என பிரகடனம் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மூலம் சினிமா, தொலைக்காட்சி, பாடல்கள், நடன நிகழ்ச்சிகள் போன்ற அனைத்தும் அறவே ஒடுக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் கண்டனங்களை மீறி இத்தகைய சர்வாதிகாரத்தை தலிபான் கையாளுகிறது. அங்கு “நல்லொழுக்கத்தை பரப்புதல் மற்றும் தீமைகளை தடுத்தல்” என்ற நோக்கத்திற்காக ஒரு அமைச்சரவை செயல்பட்டு வருகிறது. தற்பொழுது அந்த அமைச்சரவையின் மூலமாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையின்படி இனி ஆப்கானிஸ்தானில் திருமண வீடுகளில் இசை நிகழ்ச்சி நடத்துவதோ, இசை ஒலிபரப்பு செய்வதோ, பாடல்கள் பாடுவதோ தடைசெய்யப்பட்டிருக்கிறது. இசை என்பது மத கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் மனிதர்கள் மட்டுமே பாடல்களை பாட வேண்டும், அதுவும் கூட இறைவனை புகழ்வதற்காக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் மிகக் கடுமையாக தலிபான் வலியுறுத்துகிறது.

“கேளிக்கைகள், கொண்டாட்டங்கள், இசை, நடனம் போன்றவை இல்லையென்றால் திருமண வீட்டிற்கும், துக்க நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?” என தன் பெயரை குறிப்பிட விரும்பாத ஒரு மண்டபத்தின் மேலாளர் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் பெண்களே நடத்தும் வானொலி நிலையம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.