முல்லைத்தீவு தமிழர்களின் பூர்வீக நிலம் என்பது பொய்யாகிவிடும் : உதய கம்பன்பில!

சிங்கள கலாசாரம் முல்லைத்தீவு முழுவதும் பரந்து காணப்படுகின்றமை வெளிச்சத்திற்கு வருமாக இருந்தால், முல்லைத்தீவு என்பது தமிழர்களின் பூர்வீக நிலம் என்ற கருத்து பொய்யாகிவிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு குருந்தூர் மலைக்குச் சென்ற உதய கம்பன்பில அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கத்தின் அனுசரணையுடன், தமிழ் பிரிவினை வாதிகளால், 2100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தொல்பொருள் இடமான குருந்தூர் மலை விகாரைக்கு சொந்தமான காணிகளை, மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நாம் இங்கு வந்தவுடன், ஒரு விடயத்தை அவதானித்தோம். தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுகிறது.

கொழும்பிலிருந்து வடக்கிற்கு வந்து, இனவாதத்தை பரப்பினால், அதனை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதை நாம் நேரில் இன்று பார்த்தோம்.

குருந்தூர் மலை என்பது விகாரை மட்டும் இருந்த இடமல்ல. இது அநுராதபுரக் காலத்தில் இருந்த பாரியதொரு நகராமாகும்.

அநுராதபுர காலத்துக்குரிய தொல்பொருட்கள் இங்கு அனைத்து இடங்களிலும், காணப்படுகின்றன.
2000 வருடங்களுக்கு முன்னர், இங்கு வாழ்ந்தவர்கள் இரும்புகளால் நிர்மாணிக்கப்பட்ட பொருட்கள் இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனை இங்குள்ள மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். சிங்கள கலாசாரம் முல்லைத்தீவு முழுவதும் பரந்து காணப்படுகின்றமை வெளிச்சத்திற்கு வருமாக இருந்தால், முல்லைத் தீவு என்பது தமிழர்களின் பூர்வீக நிலம் என்ற கருத்து பொய்யாகிவிடும்.

இதற்கான பிரதான சாட்சியாகவே நாம் குருந்தூர் மலையை காண்கிறோம். இங்கு காணப்படும் தொல்பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க தமிழ் அரசியல்வாதிகள் பல திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

இதனால்தான், இங்கு கோயில் ஒன்று இருந்ததாகவும், விவசாயக் காணி காணப்படுவதாகவும் அவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

பேராசிரியர், இந்திரபாலன் கார்த்திகேசு என்பவர், 13 ஆவது நூற்றாண்டுவரை இலங்கையில் தமிழர்கள் வாழவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களே இங்கு வசிக்காத காலத்தில், தமிழ் பௌத்தர்கள் வசித்ததாக ஜனாதிபதி கூறியுள்ள கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

அவர் பிழையான வரலாற்றுப் புத்தகத்தை வாசித்துள்ளார் என்றே கருகிறேன்.

அவர் அறிவாளி என்று நாம் அவர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தோம். அந்த மரியாதை இன்று இல்லாமல் போயுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.