மணிப்பூர் செல்லும் ‘இந்தியா’ எதிர்க்கட்சி கூட்டணித் தலைவர்கள்

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை பதிவு செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை மணிப்பூருக்கு வெளியே விசாரிக்க உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட குகி மற்றும் மெய்தி சமூக மக்களிடையே தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், விரைவில் இரு சமூக மக்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மணிப்பூரில் தற்போது சிறிய அளவிலான மோதல் சம்பவங்கள் மட்டும் நிகழ்ந்து வருவதாகவும், கடந்த 18 ஆம் தேதிக்குப் பிறகு தற்போது வரை கலவரத்தில் ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

35 ஆயிரம் பாதுகாப்புப் படை வீரர்கள் மணிப்பூரில் குவிக்கப்பட்டுள்ளதாகவும், உணவு மற்றும் மருந்துகள் தடையின்றி கிடைப்பதாகவும், மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதாகவும் கூறியுள்ளது. மணிப்பூரில் நடைபெற்ற சம்பவங்களுக்கு மதப்பிரச்னை காரணம் அல்ல என்று கூறியுள்ள மத்திய அரசு, மியான்மரில் இருந்து இடம்பெயர்ந்து வரும் மக்களிடம் கைவிரல் ரேகை உள்ளிட்டவை பதிவு செய்யப்படுவதாகவும், மியான்மர் எல்லையில் கம்பி வேலி அமைப்பதற்கான பணியை துரிதப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது.

இதனிடையே, மணிப்பூரில் கலவரம் நடைபெற்ற பகுதிகளுக்கு I.N.D.I.A கூட்டணி எம்பிக்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் அதிர் ரஞ்ஜன் சவுதிரி, துணைத் தலைவர் கவுரவ் கோகாய், திமுகவின் கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், டி. ரவிக்குமார், உள்ளிட்ட 20 பேர் மணிப்பூர் செல்லும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழு, சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் மாநிலத்தின் கலவரம் பாதித்த பல்வேறு இடங்களுக்குச் சென்று நிலமையை நேரில் கண்டறிய திட்டமிட்டுள்ளது. 80 நாட்களுக்கு மேலாகியும் சொந்த கிராமங்களுக்கு திரும்ப முடியாமல் முகாம்களில் தங்கியுள்ள மக்களையும் சந்தித்து பேசவும் முடிவு செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.