கேரள லாட்டரியில் 11 பெண் தொழிலாளர்களுக்கு ரூ.10 கோடி பரிசு

கேரளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரிக்கும் கிடங்கில் பணிபுரியம் 11 பெண் தொழிலாளர்களுக்கு அம்மாநில அரசு லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு விழுந்துள்ளது.

கேரளத்தின் பரப்பனங்காடி நகராட்சி கிடங்கில் பணியாற்றும் 11 பெண் தொழிலாளர்கள் அண்மையில் கூட்டாக இணைந்து கேரள மாநில லாட்டரிச் சீட்டு ஒன்றை ரூ. 250க்கு வாங்கினர். இந்நிலையில் மழைக்கால குலுக்கலில் அவர்கள் வாங்கிய லாட்டரிச் சீட்டுக்கு ரூ. 10 கோடி பரிசு விழுந்துள்ளதாக கேரள லாட்டரித் துறை அறிவித்துள்ளது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
லாட்டரியில் பரிசு பெற்றுள்ள பெண் தொழிலாளர்களைச் சந்திக்க ஏராளமானோர் நகராட்சிக் கிடங்குக்கு வியாழக்கிழமை சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இது தொடர்பாக 11 பெண் தொழிலாளர்களில் ஒருவரான ராதா கூறுகையில் ‘எங்களுக்கு பரிசு விழுந்துள்ளது என்ற தகவலை அறிந்ததும் எங்களின் உற்சாகத்துக்கும் மகிழ்ச்சிக்கும் அளவில்லாமல் போனது. நாங்கள் அனைவரும் வாழ்க்கையில் சிரமப்பட்டு வருகிறோம். தற்போது கிடைத்துள்ள பணம் எங்களின் பிரச்னைகளைத் தீர்க்க உதவியாக இருக்கும்’ என்றார்.

இந்தப் பெண் தொழிலாளர்கள் அனைவரும் தங்களின் வேலையைப் பொருத்து மாதந்தோறும் ரூ. 7,500 முதல் ரூ. 14,000 வரை ஊதியமாகப் பெறுகின்றனர்.

பரப்பனங்காடி நகராட்சியின் ஹரித கர்ம சேனா என்ற திட்டத்தின் கீழ் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சிக் கிடங்கில் பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் அல்லாதவையாக பிரிக்கப்படுகின்றன.

ஹரித கர்ம சேனா திட்டத்தின் தலைவர் ஷீஜா கூறுகையில் “இந்த முறை தகுதியானவர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. பரிசு பெற்றோர் அனைவரும் கடும் உழைப்பாளிகள் மட்டுமின்றி தங்களது குடும்பத்துக்குத் தேவையான பணத்தைச் சம்பாதிப்பவர்கள் ஆவர். அவர்களில் பலருக்கும் கடன் உள்ளது. தங்களின் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியுள்ளது. சிலருக்கு தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. அவர்கள் எளிமையான வீடுகளில் வசித்து வந்தனர்’ என்றார்.

இம்முறை லாட்டரிப் பரிசு பெற்றுள்ள 11 பெண் தொழிலாளர்களும் கூட்டாக இணைந்து லாட்டரிச் சீட்டு வாங்குவது இது இரண்டாவது முறையாகும். அவர்களில் ஒருவர் கூறுகையில் ‘நாங்கள் கடந்த ஆண்டு கூட்டாக இணைந்து ரூ. 250-ஐ திரட்டி ஓணம் பம்பர் லாட்டரிச் சீட்டை வாங்கினோம். அதில் எங்களுக்கு ரூ. 7,500 பரிசு விழுந்தது. அதை நாங்கள் சரிசமாகப் பிரித்துக் கொண்டோம். அந்தப் பரிசுதான் எங்களை இந்த ஆண்டு லாட்டரிச் சீட்டை வாங்குவதற்கான நம்பிக்கையை அளித்தது’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.