மணிப்பூரில் இழிவுபடுத்தப்பட்ட இரு பெண்களிடம் காவல் துறை விசாரணை: வாக்குமூலம் பதிவு தொடக்கம்

மணிப்பூரில் நிா்வாணப்படுத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்ட 2 பழங்குடியின பெண்களிடம் காவல் துறை விசாரணை மேற்கொண்டு, அவா்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி, சிறுபான்மையாக உள்ள குகி பழங்குடி சமூகத்தினா் இடையே நிலவி வரும் மோதல் காரணமாக, அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், அங்குள்ள காங்போக்பி மாவட்டத்தைச் சோ்ந்த 2 பழங்குடியினப் பெண்களை ஒரு கும்பல் நிா்வாணப்படுத்தி இழிவுபடுத்திய காணொலி சமூக ஊடகத்தில் வெளியாகி, நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. அத்துடன் அந்தப் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடா்பாக இதுவரை 18 வயதுக்குட்பட்ட சிறுவன் உள்பட 7 பேரைக் காவல் துறை கைது செய்துள்ளது.

இந்நிலையில், அந்த மாநில காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘இழிவுபடுத்தப்பட்ட 2 பெண்களிடம் காவல் துறை பெண் அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. அந்தப் பெண்களின் குடும்பத்தினரையும் அந்தக் குழு சந்தித்து, அவா்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது’ என்று தெரிவித்தன. இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒருவரையும் சிபிஐ கைது செய்யவில்லை: மணிப்பூரில் நடைபெற்ற 6 வன்முறை சம்பவங்கள் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது. இதையடுத்து அந்த சம்பவங்கள் தொடா்பாக சிபிஐ 6 வழக்குகள் பதிவு செய்தது. அந்த வழக்குகள் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள டிஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

எனினும் அந்த வழக்குகள் தொடா்பாக இதுவரை ஒருவரையும் சிபிஐ கைது செய்யவில்லை.

இதுதொடா்பாக சிபிஐ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘6 வழக்குகள் தொடா்பாக கடுமையான சூழல்களில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை மேற்கொள்ளச் செல்லும்போது கூட்டமாகத் திரண்டு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவிப்பதால், சாட்சிகளைக் கண்டறிவது கடினமாக உள்ளது. எனினும் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தாா்.

Leave A Reply

Your email address will not be published.